Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் வோண் தலைமையிலான வோண்ஸ் வொரியர்ஸ் அணிக்கும் சச்சின் டென்டுல்கர் தலைமையிலான சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணிக்குமிடையிலான ஓய்வுபெற்ற வீரர்களுக்கான இருபதுக்கு-20 தொடரின் இரண்டாவது போட்டியில், வோண்ஸ் வொரியர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஹெளஸ்டனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட வோண்ஸ் வொரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 70 (30), ஜக்ஸ் கலிஸ் 45 (23), றிக்கி பொன்டிங் 41 (16), மத்தியூ ஹெய்டன் 32 (15), மைக்கல் வோண் 30 (22), அன்ட்ரூ சைமன்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 19 (6), ஜொன்டி ரோட்ஸ் ஆட்டமிழக்காமல் 18 (8) ஓட்டங்களைப் பெற்றனர்.
அனைத்து வீரர்களுமே இவ்வாறு பங்களிப்பை வழங்கியதோடு, முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை சங்கக்கார துவம்சம் செய்ய, கிளென் மக்ராவின் பந்துவீச்சை மத்தியூ ஹெய்டனும் கிறேம் ஸ்வானின் பந்துவீச்சை மைக்கல் வோணும் அடித்து விளாசினர். எனினும், அந்தந்த வீரர்களாலேயே அவர்களிருவரும் ஆட்டமிழந்திருந்தனர்.
சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளரான மஹேல ஜெயவர்தன செயற்பட்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் முத்தையா முரளிதரன் பந்துவீச, குமார் சங்கக்கார துடுப்பெடுத்தாட, மஹேல ஜெயவர்தன விக்கெட் காப்பாளராக இருக்கும் நிலையும் காணப்பட்டிருந்தது.
பந்துவீச்சில், லான்ஸ் குளூஸ்னர் 2, கிளென் மக்ரா 1, கிறேம் ஸ்வான் 1, விரேந்தர் செவாக் 1 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
263 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று, 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஷோன் பொலக் 55 (22), சச்சின் டென்டுல்கர் 33 (20), கிறேம் ஸ்வான் ஆட்டமிழக்காமல் 22 (8), லான்ஸ் குளூஸ்னர் 21 (8) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், அன்ட்ரூ சைமன்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனினும், 4 ஓவர்களில் 70 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். சக்லைன் முஸ்தாக், 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, ஜக்ஸ் கலிஸ், அஜித் அகர்கர் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, குமார் சங்கக்கார தெரிவானார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரை வோண்ஸ் வொரியர்ஸ் அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .