2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டன ஜுவென்டஸ், யுனைட்டெட்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸுடனான இரண்டாவது சுற்று காலிறுதிப் போட்டியின் முடிவில் மொத்த கோல்களின் எண்ணிக்கையில் பின்தங்கியிய நிலையிலேயே சம்பியன்ஸ் லீக்கிலிருந்து ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டது.

அஜக்ஸின் மைதானத்தில் இடம்பெற்றிருந்த முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், மேற்படி போட்டியின் 28ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலொன்றைப் பெற்ற ஜுவென்டஸின் முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

எவ்வாறெனினும், அடுத்த ஆறாவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் ஹக்கீம் ஸியெச்சின் உதையைக் கட்டுப்படுத்தி, அஜக்ஸின் இன்னொரு மத்தியகளவீரரான டொனி வான் டீ பீக் பெற்ற கோல் காரணமாக கோலெண்ணிக்கையை அஜக்ஸ் சமப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து போட்டியின் 67ஆவது நிமிடத்தில் அஜக்ஸின் அணித்தலைவரும் பின்களவீரருமான மத்திஜிஸ் டீ லிக்ட் தலையால் முட்டிப் பெற்ற கோலுடன் இறுதியில் 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டிக்கு அஜக்ஸ் தகுதிபெற்றது.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டி முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று காலிறுதிப் போட்டி முடிவில், 0-4 என்ற மொத்த கோல் கணக்கில் பின்தங்கி, சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், பிலிப் கோச்சினியோ ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .