2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிற்றி, பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றன

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், மன்செஸ்டர் சிற்றி, பரிஸ் ஸா ஜெர்மைன், றியல் மட்ரிட், பயேர்ண் மியூனிச், ஜுவென்டஸ், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான குழு சி போட்டியொன்றில் 5-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங் மூன்று கோல்களையும், சேர்ஜியோ அகுரோ இரண்டு கோல்களையும் பெற்றனர். அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை ருஸ்லன் மலினோவ்ஸ்கி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு ஏ போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றிருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, கிலியான் மப்பே மூன்று கோல்களையும், மெளரோ இகார்டி இரண்டு கோல்களையும் பெற்றனர்.

இதேவேளை, துருக்கியக் கழகமான கலட்டாசரியின் மைதானத்தில்இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியொன்றில், டொனி க்றூஸ் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.

இந்நிலையில், கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல்களையும், கொரென்டின் டொலிஸோ ஒரு கோலையும் பெற்றனர். ஒலிம்பியாகோஸ் சார்பாக, யூசுஃப் எல்-அரபி, குல்ஹெர்மெ டொஸ் சன்டோஸ் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ரஷ்யக் கழகமான லொகோமோட்டிவ் மொஸ்கோவுடனான குழு டி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் போலோ டிபாலா பெற்றிருந்தார். லொகோமோட்டிவ் மொஸ்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸெய் மிரான்சுக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சேர்பியக் கழகமான றெட் ஸ்டார் பெல்கிரேட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹ்காம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், சண் ஹெயுங் மின் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்ததோடு, எரிக் லமெலா ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயேர் லெவர்குஸனுடனான குழு டி போட்டியொன்றில், அல்வரோ மொராட்டா பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .