Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 17 ஆண்டுகளுக்குப் பின்பு டெஸ்ட் தொடர் வெற்றியொன்றைப் பெற்றுக்கொடுத்த இலங்கையின் டில்ருவான் பெரேராவை, "சந்தடியில்லாத நாயகன்" என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் புகழ்ந்துள்ளார்.
தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டில்ருவான் பெரேரா, டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வேகமாகக் கைப்பற்றிய இலங்கையர் என்ற சாதனையைப் படைத்ததோடு, இரண்டு இனிங்ஸ்களிலும் சேர்த்து 99 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அத்தோடு, அப்போட்டியில் அரைச்சதமொன்றையும் பெற்றிருந்தார்.
இதற்கு முன்னர் பல்கேலெயில் இடம்பெற்ற போட்டியில் இரண்டு இனிங்ஸ்களிலும் சேர்த்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்த டில்ருவான் பெரேராவை, காலியில் இடம்பெற்ற போட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென, ஒரு பகுதியினர் கோரியிருந்தனர். இந்நிலையிலேயே, காலியில் அவரது பெறுபேறுகள், இன்னமும் முக்கியம் பெறுகின்றன.
இந்நிலையில், போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், "ரங்கன ஹேரத் தொடர்பாக நாங்கள் அதிகம் கதைக்கின்றோம். ஆனால் டில்ருவான் பற்றி அவ்வாறு கதைப்பதில்லை. ஆனால், 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வேகமாகக் கைப்பற்றிய இலங்கையராக அவர் மாறியுள்ளார். முரளி அண்ணா இருக்கும் போது, ரங்கன பற்றி நாங்கள் அதிகம் கதைக்கவில்லை. ஆகவே, டில்ருவான் விடயத்திலும் அவ்வாறு தான் என நினைக்கிறேன். சந்தடியில்லாத நாயகன் அவர்" எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னைய போட்டியில், சிறப்பாகப் பந்துவீசாமை குறித்தும், மத்தியூஸ் கருத்துத் தெரிவித்தார். "கடந்த போட்டியில் அவர், நன்றாகப் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால் அவர் தளரவில்லை, அத்தோடு காலியில் எவ்வாறு பந்துவீச வேண்டுமென அவருக்குத் தெரியும். பயிற்சியின் போது, பயிற்றுநர்களுடன் இணைந்து கடினமாகப் பயிற்சி எடுத்தார். இனிவரும் காலங்களில் நாங்கள் பயன்பெறக்கூடிய பந்துவீச்சாளர் அவர்" எனக் குறிப்பிட்டார்.
தனது திறமை வெளிப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டில்ருவான், பல்லேகெலவில் தான், அதிக வேகமாகப் பந்துவீசியிருந்ததாகவும், தனது பந்துவீச்சில் பழைய காணொளிகளைப் பார்த்து, பந்துவீச்சுப் பயிற்றுநர் பியால் விஜேதுங்கவுடன் இணைந்து செயற்பட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
காலியில், கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளான சனிக்கிழமையன்று, இலங்கை அணி தனது வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தது. இதில், அவுஸ்திரேலியாவின் 2 இனிங்ஸ்களிலும் வீழ்த்தப்பட்ட 20 விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகளை, சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago