2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது லெய்செஸ்டர்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், லெய்செஸ்டர் சிற்றியும் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வென்றுள்ளன.

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், ஸ்பானிய லா லிகாக் கழகமான றியல் மட்ரிட், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்ட் ஆகியவற்றை விட முன்னணியிலிருக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் லெய்செஸ்டர் சிற்றியிடம் தோற்றுள்ளது.

குறித்த போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஜேமி வார்டி பெற்ற கோல் காரணமாக முன்னிலை பெற்ற லெய்செஸ்டர் சிற்றி, போட்டியின் முதற்பாதி முடிவில் றியாட் மஹ்ரேஸ் பெற்ற கோல் மூலமாக தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது. இரண்டாவது பாதியில், லெய்செஸ்டர் சிற்றி கோலெதனையும் பெறாதபோதும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாக போட்டியின் 79ஆவது நிமிடத்தில் ஹரி கேன் ஒரு கோலை மாத்திரமே பெற்றதால், போட்டி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றது.

இப்போட்டியில், கிறிஸ்டியான் எரிக்சன், பெர்ணான்டோ லொரென்டே, டெலே அல்லி, மூஸா சிஸாகோ ஆகியோர் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாமிடத்திலுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாக கோல் பெறும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தனர்.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் மன்செஸ்டர் யுனைட்டெட் தரவரிசையில் எட்டாமிடத்திலிருக்கும் வட்போர்ட்டை வென்றுள்ளது.

இப்போட்டியின் 19ஆவது நிமிடத்தில், ஜெஸி லிங்கார்ட் கொடுத்த பந்தை, பெனால்டி பகுதியின் முனையிலிருந்து கோலாக்கிய அஷ்லி யங் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு முன்னிலை வழங்கியதோடு, பின்னர் போட்டியின் 25ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்தில் கிடைத்த பிறீ கிக்கை கோலாக்கி முன்னிலையை 2-0 என மாற்றினார். இதன்பின்னர் போட்டியின் 32ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்ஷியல் பெற்ற கோலுடன் 3-0 என்ற முன்னிலையை மன்செஸ்டர் யுனைட்டெட் பெற, மன்செஸ்டர் யுனைட்டெட் இப்போட்டியில் இலகுவாக வெற்றிபெறும் என்ற நிலை காணப்பட்டது.

எனினும் போட்டியின் இரண்டாவது பாதியில், 77ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் ட்ரோய் டீனி பெற்றுக் கொடுத்த கோலுடனும் 84ஆவது நிமிடத்தில் அப்டுல்லாயி டுக்குரே பெற்ற கோலின் மூலமும் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னிலையை ஒரு கோலாக வட்போர்ட் குறைத்தது. எவ்வாறெனினும், போட்டியின் 86ஆவது நிமிடத்தில் ஜெஸி லிங்கார்ட் பெற்ற கோலின் காரணமாக தமது வெற்றியை உறுதிப்படுத்திய மன்செஸ்டர் யுனைட்டெட், 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .