2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தொடர்கின்றன கோலியின் சாதனைகள்

Shanmugan Murugavel   / 2016 மே 19 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய டெஸ்ட் அணியினதும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினதும் தலைவரான விராத் கோலி, மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராகப் பெயர்பெற்றவர். ஒவ்வொரு தொடரிலும், தனது அடுத்தகட்ட துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தும் கோலி, இம்முறை இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில், உச்சபட்சத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இம்முறை ஐ.பி.எல் தொடருக்குள் நுழையும் போது, 176 இருபதுக்கு-20 போட்டிகளில் பங்குபற்றியிருந்த விராத் கோலி, சதமெதனையும் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. தொடரின் முதல் 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தாலும் கூட, சதம் பெற்றிருக்கவில்லை. 5ஆவது போட்டியில் 63 பந்துகளில் சதம் பெற்ற கோலி, 8ஆவது போட்டியில் 56 பந்துகளிலும் 11ஆவது போட்டியில் 53 பந்துகளிலும் சதம் பெற்றார்.

கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கெதிராக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், 47 பந்துகளில் சதம் பெற்ற கோலி, இறுதியாக தான் விளையாடிய 9 இருபதுக்கு-20 போட்டிகளில் 4 சதங்களைப் பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் சத மழை பொழியும்போது, 4,000 ஓட்டங்களை ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த முதலாமவர் என்ற சாதனையையும் படைத்தார். இம்முறை தொடர் ஆரம்பிக்கும் போது 3,137 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவர், இதுவரை 13 போட்டிகளில் 86.50 என்ற சராசரியில் 155.01 என்ற அடித்தாடும் வீதத்தில் 4 சதங்கள், 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 865 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இம்முறை தொடரில் 4 சதங்களைப் பெற்றுள்ள கோலி, தனித்த இருபதுக்கு-20 தொடரொன்றில் அதிக சதங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக இன்னமும் இருக்கும் மகேந்திரசிங் டோணியிடமிருந்து, 2015ஆம் ஆண்டு டெஸ்ட் அணித்தலைமையைப் பெற்ற விராத் கோலி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் தலைமையையும் பெறுவதற்கான - குறிப்பாக இருபதுக்கு-20 போட்டிகளில் அண்மைக்காலமாக டோணி தடுமாறும் நிலையில் - தனது திறமையையும் வெளிக்காட்டியுள்ளார் என்பது தான் உண்மை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .