2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தடுமாறுகிறது இலங்கை

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நாக்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாக இரண்டாவது டெஸ்டில் இலங்கையணி தடுமாறி வருகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், தினேஷ் சந்திமால் 57, திமுத் கருணாரட்ன 51, நிரோஷன் டிக்வெல்ல 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா, இரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 610 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் விராட் கோலி 213, செட்டேஸ்வர் புஜாரா 143, முரளி விஜய் 128, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டில்ருவான் பெரேரா 3, ரங்கன ஹேரத், லஹிரு கமகே, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கையணி, இன்றைய மூன்றாம் நாள் முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 384 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

தற்போது களத்தில், திமுத் கருணாரட்ன 11, லஹிரு திரிமான்ன 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை இஷாந்த் ஷர்மா கைப்பற்றினார்.

இதேவேளை, இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இலங்கையணியின் சகலதுறை வீரர் தசுன் ஷானக பந்தை உருமாற்றியமை தொலைக்காட்ட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூன்று குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இப்போட்டிக்கான ஊதியத்தின் 75 சதவீதமானளவுக்கு ஒத்த தண்டமும் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .