Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 03 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் அணி, ஹராரேயில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி, சிம்பாப்வேயை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். பாகிஸ்தான் அணியின் சுழற்சி முறை அடிப்படையில் அகமட் ஷசாத்துக்கு பதிலாக அசாட் ஷாஃபிக்கும், இமாத் வசிமுக்கு பதிலாக பிலால் ஆசிவும் இடம்பெற்றனர்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சமு சிபாபா 90 ஓட்டங்களையும், அணித்தலைவர் எல்டன் சிக்கும்புரா 67 ஓட்டங்களையும், பிரயான் சாரி 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக வகாப் ரியாஸ் நான்கு விக்கெட்டுக்களையும், மொகமட் இர்பான், ஆமீர் யாமின் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, பந்தை தம்மால் காணமுடியவில்லையெனக் கூறி நடுவர்களால் ஆட்டம் இடைநிறுத்தப்படும்போது டக்வேர்த் லூயிஸ் முறையின் அடிப்படையில் ஐந்து ஓட்டங்கள் பின் தங்கியிருந்த பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுக்களை 76 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியபோதும், அதன் பின் ஜோடி சேர்ந்த ஷோய்ப் மலிக், ஆமீர் யாமின் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். இதன் பின் ஆட்டம் இடைநிறுத்தப்படும்போதும் ஷோய்ப் மலிக் 96 ஓட்டங்களையும், யாசிர் ஷா 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆமீர் யாமின் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக தினேஷே பணயங்காரா இரண்டு விக்கெட்டுக்களையும், கிரேமி கிரீமர், லுக் ஜோங்வி, எல்டன் சிக்கும்புரா, சமு சிபாபா தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் நாயகனாக எல்டன் சிக்கும்புரா தெரிவானார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் தீர்மானமிக்கதுமான போட்டி இலங்கைநேரப்படி திங்கட்கிழமை (05) மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .