2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 13 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின், இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 
 
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றது.

தமது இன்னிங்ஸின் பெரும்பாலான பகுதிகளில் இலகுவாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து அணி, இறுதி ஓவர்களில், வகாப் ரியாசின் வேகமான, துல்லியமான பந்துவீச்சால் ஓட்டங்களை வேகமாக குவிக்க திணறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 108 ஓட்டங்களைப் பெற்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்ந தனது கன்னிச் சதத்தைப் பெற்றார். தவிர, ஜோ ரூட் 63, ஜேசன் ரோய் 54 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக வகாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் இர்பான், சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட இஃப்திகார் அகமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்று 95 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக குறிப்பிடும்படியாக சஃப்ராஸ் அகமட் மாத்திரம் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும் டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும் அதில் ரஷீத், ரீஸ் டொப்லி, மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .