2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பதவி விலகுகிறார் டரன் லீமன்

Editorial   / 2017 டிசெம்பர் 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான டரன் லீமன், இங்கிலாந்தில் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.

47 வயதான டரன் லீமன், கடந்தாண்டு ஓகஸ்டில் தனது ஒப்பந்தத்தை 2019ஆம் ஆண்டு வரை நீடித்துக் கொண்டபோதே அதற்கப்பால் தான் தொடர மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது குறித்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ள முன்னாள் அவுஸ்திரேலிய வீரரான டரன் லீமன், நீண்ட நேரத்தை செலவழிப்பதன் காரணமாகவும் நீண்ட தூரம் பயணம் செய்யவிருப்பதன் காரணமாகவும் அதற்கு மேல் தொடர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு, இங்கிலாந்தில் வைத்து 2019ஆம் ஆண்டு மிக முக்கியமாக இருக்கின்ற நிலையிலேயே 2019ஆம் ஆண்டுடன் டரன் லீமன் விலகுகின்றார். 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாட முன்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் பங்கேற்கவுள்ள அவுஸ்திரேலியா, உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ளது.

2013ஆம் ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கு முன்னர் பயிற்சியாளராக டரன் லீமன் பதவியேற்றிருந்தார். அத்தொடரை 3-0 என அவுஸ்திரேலியா இழந்தபோதும் 2013-14ஆம் ஆண்டு பருவகால ஆஷஸ் தொடரில் 5-0 என இங்கிலாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்திருந்தது. எனினுனும் இங்கிலாந்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை 3-2 என அவுஸ்திரேலியா இழந்திருந்தது. எவ்வாறெனினும், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில், 3-0 என அசைக்க முடியாத முன்னிலையை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இவை தவிர, டரன் லீமனின் பயிற்றுவிப்பின் கீழேயே 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

இந்நிலையில், டரன் லீமன் விலகுகின்ற நிலையில், கடந்தாண்டு இடம்பெற்ற இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப் பயணத்திலும் டரன் லீமனை பிரதியீடு செய்த இன்னொரு முன்னாள் அவுஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர் நிரந்தரமாக டரன் லீமனைப் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X