2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெண்களின் உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பெண்களின் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்றுள்ளது.

லயோன் ஒலிம்பிக் அரங்கில் இன்று நள்ளிரவு இடம்பெற்ற இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் முன்களவீராங்கனையான மேகன் றபினோ, இங்கிலாந்தின் கோல் காப்பாளர் கரென் பார்ட்ஸ்லே ஆகியோர் பின்தொடை தசைநார் உபாதை காரணமாக பங்கெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில், மேகன் றபினோவைப் பிரதியீடு செய்த கிறிஸ்டன் பிறஸ், சக பின்கள வீராங்கனை கெல்லி ஓ ஹராவிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டி, கரென் பார்ட்ஸ்லேயை பிரதியிட்ட கார்லி டெல்ஃபோர்ட்டைத் தாண்டி போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெற்றது.

எனினும், அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில், சக முன்கள வீராங்கனையான பெத் மெட்டிடமிருந்து வந்த பந்தை இங்கிலாந்தின் முன்கள வீராங்கனையான எலென் வைட் கோலாக்க கோலெண்ணிக்கையை இங்கிலாந்து சமப்படுத்தியது.

எவ்வாறெனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில், சக மத்தியகள வீராங்கனையான லின்ட்சே ஹொரான் பெனால்டி பகுதிக்குள் வழங்கிய பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய ஐக்கிய அமெரிக்காவின் இணைத்தலைவியும் முன்களவீராங்கனையுமான அலெக்ஸ் மோர்கன் தனதணிக்கு மீண்டும் முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், காணொளி மத்தியஸ்தர் அமைப்புடன் கலந்தாலோசித்து, எலன் வைட்டை ஐக்கிய அமெரிக்காவின் பின்கள வீராங்கனையான பெக்கி செளவர்பிரன் விதிமுறைகளை மீறி கையாண்டார் எனத் தெரிவித்து இங்கிலாந்துக்கு போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பெனால்டியை மத்தியஸ்தர் வழங்கியபோதும், இங்கிலாந்தின் அணித்தலைவியும் பின்களவீராங்கனையுமான ஸ்டீவ் ஹூட்டன் செலுத்திய பெனால்டியை ஐக்கிய அமெரிக்காவின் கோல் காப்பாளர் அலிஸா நயெஹர் தடுக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அமெரிக்கா வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .