2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெண்களின் உலகக் கிண்ணம்: நான்காவது தடவையாகக் கைப்பற்றியது அமெரிக்கா

Editorial   / 2019 ஜூலை 08 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பெண்களின் உலகக் கிண்ணத் தொடரை நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.

பிரான்ஸில் இடம்பெற்றுவந்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எட்டாவது தொடரில் சம்பியனானதன் மூலமே, நான்காவது தடவையாக பெண்களின் உலகக் கிண்ணத் தொடரை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியிருந்தது.

லயோன் ஒலிம்பிக் அரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியை நெதர்லாந்து ஆக்ரோஷமாக ஆரம்பித்தபோதும் நகர்ந்து சென்ற போட்டியை படிப்படியாக தமது பக்கம் ஐக்கிய அமெரிக்கா நகர்த்திக் கொண்டது.

அந்தவகையில், முதற்பாதியில் ஐக்கிய அமெரிக்காவுக்கு சவாலை வழங்கிய நிலையில், இடைவேளைக்கு பின்னரும் முதற்பாதியின் பாணியையே நெதர்லாந்து பின்பற்றியபோதும், நெதர்லாந்தின் ஆக்ரோஷமே அவர்களின் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

நெதர்லாந்தின் பெனால்டி பகுதிக்குள் வைத்து, ஐக்கிய அமெரிக்காவின் முன்களவீராங்கனை அலெக்ஸ் மோர்கனின் கையை நெதர்லாந்தின் பின்கள வீராங்கனை ஸ்டஃபனி வான் டெர் கிரக்டின் கால் பதம் பார்த்த நிலையில் அலெக்ஸ் மோர்கன் களத்தில் வீழ்த்திருந்தார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் மூலையுதையொன்றையே மத்தியஸ்தர் வழங்கியிருந்து, பின்னர் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்புடனான கலந்தாலோசனையில் மூலையுதையை பெனால்டியாக மத்தியஸ்தர் மாற்றியிருந்த நிலையில் இந்த 61ஆவது நிமிட பெனால்டியை ஐக்கிய அமெரிக்காவின் முன்களவீராங்கனையும், இணை அணித்தலைவியுமான மேகன் றபினோ கோலாக்க ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து தமது சக்தியை இழந்தவர்களாக நெதர்லாந்து காணப்ட்ட நிலையில், மத்தியகளத்திலிருந்து சென்ற ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகளவீராங்கனை றோஸ் லவல்லி 69ஆவது நிமிடத்தில் பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அமெரிக்கா வென்றது.

இத்தொடரில் ஆறு கோல்களைப் பெற்றதோடு, மூன்று கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்த மேகன் றபினோ, தொடரில் அதிக கோல்களைப் பெற்றவர்களுக்கான தங்கப் பாதணி, தொடரின் சிறந்த வீராங்கனைக்கான தங்கப் பந்து விருதுகளை வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .