2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மே. தீவுகளுக்கெதிராக அவுஸிக்கு இனிங்ஸ் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஹோபார்டில் இடம்பெற்றுவந்த இப்போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களுடன், இன்றைய நாளை மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பித்தது.

ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில், டெரன் பிராவோ 108 ஓட்டங்களையும் கேமர் றோச் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜொஷ் ஹேஸல்வூட் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன் 3 விக்கெட்டுகளையும் பீற்றர் சிடில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, முன்னரைவிட மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. 5 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, இறுதியில் 148 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், தனித்து நின்று போராடிய கிறெய்க் பிறெத்வெய்ட், 94 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும், 20 ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் ஜேம்ஸ் பற்றின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட் 3 விக்கெட்டுகளையும் மிற்சல் மார்ஷ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, அடம் வோஜஸின் ஆட்டமிழக்காத 269 ஓட்டங்கள், ஷோன் மார்ஷின் 182 ஓட்டங்கள், டேவிட் வோணரின் 64 ஓட்டங்கள், ஜோ பேர்ண்ஸின் 33 ஓட்டங்களின் துணையோடு 4 விக்கெட்டுகளை இழந்து 583 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக, அவுஸ்திரேலியாவின் அடம் வோஜஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .