2025 ஜூலை 12, சனிக்கிழமை

லிவர்பூல், செல்சி, சிற்றி வென்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் லிவர்பூல், செல்சி, மன்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகள் வென்றன.

லெய்செஸ்டர் சிற்றி அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், லிவர்பூலின் நட்சத்திர முன்கள வீரர் மொஹமட் சாலா இலகுவான கோல் பெறும் வாய்ப்பொன்றை தவறவிட்டபோதும் லெய்செஸ்டர் சிற்றியின் பின்கள வீரர் ஹரி மக்கியூரியிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே கோலாக்கிய சாடியோ மனே லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த ஆட்டத்தின் முதற்பாதி முடிவில், ஜேம்ஸ் மில்னரின் மூதையுதையை தலையால் முட்ட்டி கோலாக்கிய றொபேர்ட்டோ பெர்மினோ தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்க முதற்பாதி 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்தபடி முடிவுக்கு வந்தது.

பின்னர், போட்டியின் 63ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் விட்ட தவறொன்றையடுத்து லெய்செஸ்டர் சிற்றியின் கெலெச்சி லெஹாஞ்சோ பந்தைக் கைப்பற்றியிருந்ததுடன் தொடர்ந்து அவரின் சக வீரர் ரஷிட் கெஸட் கோலொன்றைப் பெற்று லெய்செஸ்டரின் முன்னிலையைக் குறைத்தார்.

எவ்வாறெனினும், அதன்பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில்  இடம்பெற்ற ஏ.எவ்சி. போர்ண்மெத் அணியுடனான போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய பெட்ரோ, இன்னொரு மாற்று வீரராகக் களமிறங்கிய ஒலிவர் ஜிரூட்டுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்து போட்டியின் 72ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் முன்னிலை பெற்றிருந்த செல்சி, போட்டியின் 85ஆவது நிமிடத்தில் ஈடின் ஹஸார்ட் பெற்ற கோலோடு 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற நியூகாசில் யுனைட்டெட் அணிக்கெதிரான போட்டியின் எட்டாவது நிமிடத்திலேயே ரஹீம் ஸ்டேர்லிங் பெற்ற கோலுடன் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் 30ஆவது நிமிடத்தில், சலோமன் றொன்டன் கொடுத்த பந்தை டிஅன்ட்ரே யெட்லின் கோலாக்க கோலெண்ணிக்கையை நியூகாசில் யுனைட்டெட் சமப்படுத்தியது. எவ்வாறெனினும், போட்டியின் 52ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து கைல் வோக்கர் பெற்ற அபாரமான கோலோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .