Shanmugan Murugavel / 2016 ஜனவரி 07 , மு.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் அணி, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரவரிசையில், 10ஆவது இடத்தை அவ்வணி, உத்தியோகபூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவந்த இத்தொடரில், முதலிரு போட்டிகளையும் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்த போதிலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் சிம்பாப்வே வென்றிருந்தது. இதனால், தொடரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக, 5ஆவது போட்டி மாறியது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிம்பாப்வே அணி, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. ஓர் ஓட்டத்துக்கே முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் ஹமில்டன் மஸகட்ஸா 110 (111), பீற்றர் மூர் 42 (76), றின்மன்ட் முத்தும்பமி 40 (47) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஆமிர் ஹம்ஸா 3 விக்கெட்டுகளையும் தவ்லட் ஸட்ரன், றஷிட் கான், மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
3 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடனும், 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களுடனும் தடுமாறிய அவ்வணி, இறுதிநேர வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் ஆட்டமிழக்காமல் 82 (68), ஹஷ்மதுல்லா ஷஹிடி 32 (55), றஷிட் கான் 31 (41), நூர் அலி ஸட்ரன் 30 (42) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், லூக் ஜொங்வே 3, நெவில் மட்ஸிவா, சீகன்டர் ராஸா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, குல்படின் நைப் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, ஆப்கானிஸ்தானின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷஷாத் தெரிவானார்.
கடந்தாண்டு ஒக்டோபரிலும், சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரொன்றை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான், தற்போது 2ஆவது முறையாகவும் அத்தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .