2026 மே 06, புதன்கிழமை

'த.தே.கூ உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வது போல அடிக்கடி 4ஆம் மாடிக்கும் செல்கின்றனர்'

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வதுபோல அடிக்கடி 4ஆம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4ஆம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது. இது யாருடைய சிந்தனை என நான் கேட்க விரும்புகின்றேன்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

'எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு, விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், எம்.பத்மநாதன், அரியநேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜன், செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் 4ஆம் மாடிக்கு சென்றுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு 4ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வது போல 4ஆம் மாடிக்கும் சென்று வருகின்றோம்.

எத்தனை வருடங்கள் சென்றாலும் தமிழ் தேசிய விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடப்பட்டார்கள்.

அந்த இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதற்காக தமிழ் தேசியத்தை அழித்து விடவில்லை.

இன்னுமொரு இனத்தை அழித்து வெற்றி விழா கொண்டாடுவது வெற்றி விழாவா? என நான் கேட்க விரும்புகின்றேன். ஒரு நாட்டிற்கு எதிராக யுத்தம் செய்து அதில் வெற்றிபெற்று விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவாகும்.

அரசாங்கம் வெற்றி விழா கொண்டாடுவதானது இன்னும் மக்கள் அடிமைகளாக இருப்பதையே காட்டுகின்றது.

முள்ளிவாயக்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு பிராத்தனை செய்யக்கூட முடியாத அடக்கு முறைக்குள் நாம் வாழந்து கொண்டிருக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .