2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வன வளத்தை 2020இல் 35 சதவீதமாக மாற்றுவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம் : டி.பிரசாத்

Super User   / 2014 ஜூலை 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இலங்கையில் தற்போதுள்ள 29 சதவீதமான வன வளத்தினை 2020ஆம் ஆண்டில் 35 சதவீதமாக மாற்றுவதே மஹிந்த சிந்தனைத்திட்டத்தின் நோக்கம் என்று மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலனத் திணைக்கள அதிகாரி டி.பிரசாத் நேற்று (11) தெரிவித்தார்.

வன பாதுகாப்பு மற்றும் விழிப்புக்குழு அமைத்தலும் வனங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துதலும் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முருத்தானை கிராம சேவகர் பிரிவில் அக்குறானை பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வனங்களுக்கு என்று அடையாளப்படத்தப்பட்ட இடங்களை அழிப்பதனால் மழை இல்லாமல் போகின்றது. மழை உரிய காலத்தில் பெய்யா விட்டால் விவசாயம் முற்றாக பாதிப்படைய கூடும். இதனால் பாதிப்பு பொது மக்களாகிய எமக்கே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அரச காணிகளை முறையற்ற வகையில் கைப்பற்றுவது, வனங்களை அழிப்பது, மிருகங்களை வேட்டையாடுவது போன்ற வனக்குற்றங்களைச் செய்பவர்கள் நீதி மன்றத்தின் மூலம் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஐந்து வருடம் வரை தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுண்டு என அவர் குறிப்பிட்டார்.

மேலும் சேனைப் பயிர்ச் செய்கைக்காக  காட்டுக்கு தீ வைத்தல் மற்றும் சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்டு  காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு கிராம மக்களின் உதவி மிகவும் அவசியம் அவ்வாறான குற்றங்களைச் செய்பவர்களைக் இனங்கண்டு, வன பரிபாளனத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடத்தில் முறையிடுவதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது, முருத்தானை கிராம சேவகர் பிரிவில் முருத்தானை, அக்குரானை, மினுமினுத்தவெளி, கல்லடிவெட்டை, கானாந்தென்னை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், கிராம சேவகர், பாடசாலை அதிபர், கோவில் நிருவாகிகள் உள்ளடங்களாக வன பாதுகாப்பு விழிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வனவள உதவி பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ், உதவி வட்டார அதிகாரி என்.செல்வநாயகம், பகுதி வனவள திணைக்கள உத்தியோகத்தர் ஏ.பி.கரீந்த, வனவள திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸ், முருத்தானை கிராம சேவை உத்தியோகத்தர் லத்தீஸ் காந்தன்;, 232 படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் அமரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0

  • வை.எல்.மன்ஸூர் Monday, 14 July 2014 03:20 AM

    இந்த வனமெல்லாம் மக்கள் வாழ்ந்த இடம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X