2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24500 பேர் விதவைகள்: ஹிஸ்புல்லாஹ்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'இலங்கையிலேயே ஆகக் கூடுதலான விதவைகளைக் கொண்டது மட்டக்களப்பு மாவட்டம். கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் 24,500 பேர் விதவைகளாக வாழ்விழந்துள்ளார்கள் என்பது பெருந்துயரம் நிறைந்த ஒரு விடயமாகும்' என பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதான உழைப்பாளிகளாக பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் விதவைகளுக்கும் சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்து அவர் உரையாற்றினார்

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'இவ்வாறானவர்களின் வாழ்க்கையிலே புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக என்னுடைய அமைச்சினூடாக பல்வேறுபட்ட பணிகளை நான் ஏற்கெனவே ஆரம்பித்திருந்தேன்.

விதவைகள் யாரையும் சார்ந்து நிற்காது சொந்தக் காலிலே நிற்க வேண்டுமென்பதற்காக பல்வேறுபட்ட துறைகளிலே அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வாழ்வாதாரத்திலே அவர்கள் முன்னேறவேண்டும் என்பதற்காக நான் மகளிர் விவகார பிரதியமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தேன்.

விதவைகளுக்கு விமோசனம் அளிக்கும் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் எமக்கு சுமார் 100 மில்லியன் ரூபாய்களைத் தந்துதவியது.

அந்த உதவினூடாக இந்த மாவட்டத்திலே யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த 40 வயதிற்குட்பட்ட சுமார் 800 விதவைகளுக்கு வாழ்வழிக்கின்ற பணியை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

ஆயினும் அவை பெரிய முதலீடுகள் அல்ல. சிறியளவிலான நடுத்தர தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு இந்த உதவிகள் போதுமானதாக இருக்கும். ஏதோவொரு வகையிலே அவர்கள் கையேந்தாமல் சிறிய தொழில்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.

இப்பொழுது நான் பொறுப்பு வகிக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து பொருளாதார வளத்தைத் தேடிக்கொள்ளக் கூடிய மிகப்பெருந் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

குறிப்பாக நீங்கள் சுயதொழிலை ஆரம்பிப்பதாக இருந்தால் தொழில்நுட்ப உதவியோடு ஏனைய தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தர என்னுடைய அமைச்சு தயாராக உள்ளது.

ஏறாவூர்ப் பிரதேசத்தின் அபிவிருத்திக் கூட்டங்களிலே நான் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தலைமை தாங்கியிருக்கவில்லை.

இருந்தாலும் மாவட்டத்தினுடைய, பிரதேசத்தினுடைய அபிவிருத்தி என்று வரும் பொழுது அது எந்தப் பிரதேசமாக இருந்தாலும் அதிலே எனது முழுப்பங்களிப்பையும் செய்வதிலே நான் என்றும் பின்னின்றதில்லை.

சமீபத்தில் கிழக்கில் இடம்பெற்ற தெயட்ட கிருள எனும் தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குத்தான் அதிகளவில் நிதி வாரி வழங்கப்பட்டது.

தேசத்திற்கு மகுடமாக ஆகக் கூடுதல் நிதியைப் பெற்றுக் கொண்டது நமது மட்டக்களப்பு மாவட்டம்தான். மட்டக்களப்புக்குக் கிடைத்த நிதியில் அரைவாசி கூட ஏனைய மாவட்டங்களுக்குக் கிடைக்கவில்லை.

தெயட்ட கிருள என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த மாவட்டத்திலே உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 75 மில்லியன் தொடக்கம் 150 மில்லியன் ரூபாய் வரையில் நான் நிதியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அதிலே ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கு 120 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இதிலே தமிழ் பிரதேசம் முஸ்லிம் பிரதேசம் என்று நான் பாகுபாடு காட்டுவதுமில்லை முன்னுரிமை அளிப்பதுமில்லை.
இதேவேளை கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் கூடக் கிடைக்கவில்லை.

இருந்தாலும் நான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சுமார் 2,800 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்திருந்தேன்.

இதற்காக நான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முழுப் பலத்தையும் பயன்படுத்தி திறைசேரியோடு அதிகம் வாதாட வேண்டியிருந்தது.

இந்த மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரச்சினைகளை எவ்வாறெல்லாம் தீர்க்க முடியுமோ அதற்காக நான் எனது அமைச்சினூடாக இரவு பகலாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இன்று என்னுடன் கூட வந்த மத்திய கிழக்கு கொடையாளியொருவர் விதவைகளுக்காக ஏழு இலட்ச ரூபாவை வழங்கினார். இந்தப் பிரதேசத்திலுள்ள விதவைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஏழு இலட்ச ரூபாவையும் பகிர்ந்தளிக்குமாறு நான் பிரதேச செயலாளர் அவர்களை வேண்டிக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்கு வழங்கப்படும் இந்த பொருளாதார வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகளைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும், உங்களது பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி காண வேண்டும் இதுதான் எனதும் எனது அமைச்சினதும் நோக்கமாகும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X