2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 2 சதவீதத்தால் வறுமை குறைவு

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 சதவீதத்தால் வறுமை குறைந்துள்ளது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் பிரதிநிதிகள்  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலலாஹ்வை காத்தான்குடியிலுள்ள அவரது பிராந்திய அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (25) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'2010ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி 20.3 சதவீதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய தகவலின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 சதவீதமாக இது குறைந்துள்ளது.

எனினும், இலங்கையில் வறுமை நிலையில் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மொத்தக் குடும்பங்களில் 47 சதவீதமானோருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகின்றது.  இதுவும் வறுமை நிலையை கூடுதலாக காட்டுவதற்கு ஒரு காரணமாக உள்ளது.

கடந்த 02 வருடங்களில் 700 குடும்பங்கள் தமது சமுர்த்தி நிவாரண முத்திரையை மீள ஒப்படைத்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலை குறைந்துள்ளதை காட்டுகின்றது.

சமுர்த்தி எடுக்கத் தகுதியற்ற வசதி படைத்தவர்களுக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. எனினும், அப்படியானவர்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரை வழங்கப்பட்டிருப்பின், அவைகளை மீளப் பெற்று தகுதியான வறுமையான குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அவர்களுடைய விருப்பத்தை பெறுவதற்காக 04  சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் திவிநெகும திணைக்களத்திற்குள் செல்வதே மிகப் பொருத்தமான நடவடிக்கையென நான் கருதுகின்றேன். ஏனெனில்,  திவிநெகும திணைக்களத்திற்குள் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் உட்பட அனைத்து அரசாங்கத்தின் சலுகைகளும் உண்டு.

இவற்றை கருத்திற்கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சிறந்த தெரிவாக நேரடியாக திவிநெகும திணைக்களத்திற்குள் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். எனினும், இது அவர்களுடைய விருப்பத்தை பொறுத்தது.

சிலர் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு நிற்க விரும்புகின்றனர்.  இது அவர்களின் விருப்பமாகும். நேரடியாக திவிநெகும திணைக்களத்திற்குள் செல்வதை எனது ஆலோசனையாக கூறி வைக்க விரும்புகின்றேன். 

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தை தெரிவிப்பதற்கு வழங்கியுள்ள கடைசித் திகதி எதிர்வரும் 31ஆம் திகதியாகும். இதற்குள் தமது விருப்பத்தை தெரியப்படுத்த வேண்டும். குறித்த திகதிக்குள் விருப்பத்தை  தெரியப்படுத்தவில்லையெனில், தாமாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டதாக கருதப்படுவார்கள்.

முஸ்லிம் பிரதேசங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி வங்கி நடைமுறையில் வட்டி உள்ளது என்பதையும் இது இஸ்லாத்தின் பார்வையில் ஹறாம் என்பதையும் வைத்து மிகவும் சஞ்சலப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். இது தொடர்பாக என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வட்டியென்பது இஸ்லாத்தின் பார்வையில் ஹறாமாகும். வட்டி மிகப் பெரிய பாவமாகும். ஆனால், சமுர்த்தியின் எல்லா நடவடிக்கைகளும் வட்டியல்ல.

ஏனைய வங்கிகளிலுள்ள  வட்டியில்லாத இஸ்லாமிய நிதி நடவடிக்கை பிரிவு போன்று சமுர்த்தி வங்கிகளிலும் வட்டியில்லாத நடைமுறையை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கெனவே கிண்ணியாவில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதையும் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

திவிநகும திணைக்களத்தின் நடைமுறை, அதன் கட்டமைப்பு இன்னும் ஒர்ப்ரு மாதங்களில்; செயற்படுத்த ஆரம்பித்தவுடன் சமுர்த்தி உத்தியோத்தர்களுக்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

உங்களால் வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைள் தொடர்பில் நான் கவனம் செலுத்தி அவைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .