2025 மே 01, வியாழக்கிழமை

வடக்கு கிழக்கில் 2013 இல் 1,17,726 அடையாள அட்டைகள் விநியோகம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-மாணிக்கப்போடி சசிகுமார்


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2013 ஆண்டில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 726 தேசிய அடையாள அட்டைகள் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இரு மொழியிலான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 11 அம் திகதி வாகரையில் நடாத்திய நடமாடும் சேவையின் போது பெறப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய தேசிய அடையாள
அட்டைகள் இன்று வாகரைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனத்தின் அனுசரணையுடன் கபே நிறுவனம் மற்றும் சி.எச்.ஆர் நிறுவனம் என்பன இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடத்தியது.

நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வாகரையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை மண்முனைப் பற்றுப் பிரதேசத்தில் 9ஆவது நடமாடும் சேவையாக நேற்று  இடம்பெற்று முடிந்தது.

இது குறித்து விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  கல்லடி ஓசானிக் விடுதியில் நேற்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சரியான ஆவணங்கள் இல்லாமையினால் அனேகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு முடியுமான வரை அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு நடமாடும் சேவையினை நடத்தினோம்.

உத்தேச வயதுச் சான்றிதழ் வழங்கியாவது தேசிய அடையாள அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்தோம்.

இதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தேசிய அடையாள அட்டைக்காக 1,31,246 விண்ணப்பங்கள் கிடைத்தன. இந்நிலையில் 1,17,726 தேசிய அடையாள அட்டைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

1972 ஆம் ஆண்டுவரை தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவந்த போதும் எத்தனை வழங்கப்பட்டுள்ளது என்ற சரியான கணக்கு இல்லாத நிலை உள்ளது.

2013 ஜனவரி மதல் டிசம்பர் வரை வடக்கு மாகாணத்தில் இருந்து 69,769 விண்ணப்பங்கள் கிடைத்தன. அதில்  54,683 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இருந்து 61,477 விண்ணப்பங்கள் கிடைத்த நிலையில் 63,043 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

2014 அம் ஆண்டு முதல் அனைவருக்கும் இரு மொழியிலான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ் மக்களுக்கு தமிழ் , சிங்கள மொழிகளிலும் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அனைவரும் இலங்கையர் என்பதால் இலங்கையின் அரச கரும மொழியான தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

இதுவரை தேசிய தரத்திலான அடையாள அடடையே வழங்கப்பட்டது.2014 ஆம் ஆண்டு முதல் சர்வதேச தரத்திலான இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கபே நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் கருத்து

கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஹூஸைன் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு இலவசமாக தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை கடந்த நவம்பர் 11 ஆம் திகதி வாகரையில் ஆரம்பித்து 9 ஆவது நடமாடும் சேவையினை மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று வெள்ளிக் கிழமை நடாத்தியுள்ளோம்.

இவ் நடமாடும் சேவையின் போது 6456 தேசிய அடையாள அட்டையினைப் பெறுவதற்கு அனுசரணை வழங்கியுள்ளோம்.அதே வேளை 2415 பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெற்றுக் கொடுத்ததுடன் 245 திருமணப் பதிவினையும் செய்துள்ளோம்.

இத் திருமணப் பதிவினை 70 வயது பூர்தியடைந்தவர்கள் கூட செய்துள்ளனர்.அத்துடன் 86 மரணப் பதிவுச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவற்றைப் பெறுவதற்கான அனைத்துச் செலவுகளையும் யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனத்தின் அனுசரணையுடன் எனது கபே மற்றும் சி.எச்.ஆர் மனித உரிமை நிறுவனம் ஆகியன வழங்கியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .