2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'யுத்தத்தால் 21,000 பேர் கணவன்மாரை இழந்துள்ளனர்'

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில்; மாத்திரம் யுத்தத்தால் கணவன்மாரை   இழந்த பெண்கள் 21,000 பேர் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பட்டிருப்பு வுளுடைமன் விளையாட்டுக்கழகத்தின் 28ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பட்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை  விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பாரிய அபிவிருத்திகள் விறுவிறுப்பாக  இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இம்மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்த  1,700 பேருக்கு தலா  100,000  ரூபா படி வழங்கப்படவுள்ளன.

கல்வியையும் அதிக அக்கறையுடன் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி மிகவும்  போட்டித்தன்மையுடன்  அமையும்.  இந்நிலையில்,  எமது பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன்   கற்பிக்க வேண்டும்.

தற்போது 06 கோடி ரூபா செலவில் 06 தொழில்நுட்ப பாடசாலைகளை மட்டக்களப்புக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவரலாம். 

தொழில்நுட்ப பாடத்தை மாணவர்கள் கற்பதால் இனிவரும் காலத்தில்  பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்களும்; அதிகரிக்கும்.  இவ்வருடம் அதிகம் கல்வித்;துறைக்காக நிதியொதுக்கீடு  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எமது தமிழ் மக்களுக்கு அரசியல் பலமும் தேவையாகவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் அமைச்சராக நான் மட்டும் இருந்து சேவை செய்து வருகிறேன். நான் இல்லாவிட்டால் எமது மக்களுக்காக வாதிடுவதற்கு யாருமில்லை என்ற துர்ப்பாக்கிய நிலை தற்போது காணப்படுகின்றது. இதனை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நானும் எமது மக்களும் ஒன்றிணைந்து இன்றும் பல புதியவர்கள் நாடாளுமன்றத்திற்கு ஆளும் கட்சியூடாக அனுப்புவோம். எதிர்கட்சிகளில் இருந்துகொண்டு குறைகளை கண்டுபிடிப்பதற்கு எதுவித சந்தர்ப்பங்களும் இல்லை.

எமது மாவட்டத்தை  நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளர்த்தெடுப்போம். தற்போது எந்தவிதமான  உரிமைப் பிரச்சனைகளுமில்லை. எந்தவிதமான கைதுகளும் இல்லை. இடம்பெயர்வுகள் இல்லை. எந்தநேரமும் எங்கும் சென்றுவரலாம். இதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது முஸ்லிம்;களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் நடைபெற்றாலும், அரசாங்கத்திலிருந்து ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட வெளியேறவில்லை. அவர்கள் அரசாங்கத்திலிருந்து கொண்டே வாதிடுகின்றார்கள். இதே அரசியலை அரசின் பக்கமிருந்து நாமும் செய்தால்தான்  வளங்களை எமது மக்களுக்கு அரசிடமிருந்து  அள்ளி வழங்கலாம்.

குறுகிய காலத்தில மட்டக்களப்பு மாவட்டத்தை  பாரிய அபிவிருத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் பல மில்லியன் ரூபாவை செலவு செய்து பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் மேலும் 50 நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது மத்திய வங்கியின் அறிக்கையின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில்; வறுமை குறைந்துள்ளது. இது மிகக் குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.
காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களின் முன்னேற்றத்திற்கு காரணம் அவர்களிடமிருக்கின்ற அரசியல் பலமும் பொருளாதார வளர்ச்சியுமாகும். அங்கு ஊருக்கு ஒரு அமைச்சர் இருக்கின்றர்கள். அதுபோல் நாமும் முன்னேற வேண்டும். இதனை விடுத்து எதிர்ப்பு அரசியலிலிருந்து கொண்டிருந்தால் எதுவும் செய்யமுடியாது. இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு மாற்றங்களைக் கொண்டு வருபவர்களாக எமது மக்கள் இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் 3 அமைச்சர்கள் இருப்பார்களேயானால் எமது மக்களின் அபிவிருத்தியில் பரிய முன்னேற்றம் ஏற்படும்.

வீதி அபிவிருத்தி, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றுக்கு விசேட செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான்கரை என்ற வேறுபாடு கிடையாது.  ஏனெனில் சகலருக்கம் சகல வளங்களும் கிடைக்கின்றன.

230 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு 230 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த கால யுத்தத்தின் நேரடித் தாக்கத்தை  எதிர்கொண்டவர்கள் எமது தாய்மார்கள். அந்த தாய்மார்களின் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நிதி மாதர் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால்  கணவன்மாரை  இழந்த பெண்கள் 21,000 பேர் உள்ளார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .