2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்திய கிழக்கில் நெருக்கடிகளுக்குள்ளான 38 பேரின் நலனோம்பு விடயங்கள் கவனிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான 6 மாத காலப்பகுதியினுள் மத்திய கிழக்கில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான 38 பேரின்   நலனோம்பு விடயங்கள் கவனிக்கப்பட்டுள்ளதாக  'எஸ்கோ' எனப்படும் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தோரின் நலம்னோம்பு விடயங்களே கவனிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் இன்னபிற தொழில்களுக்குச்; சென்று நெருக்கடிகளைச் சந்திக்கும் இலங்கையர்களுக்காக தமது நிறுவனம் 'தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்தலுக்கான செயற்றிட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவி;ஸர்லாந்து முகவரகம் இந்தத் திட்டத்துக்கு நிதி அனுசரணை வழங்குகின்றது.

வீட்டுப் பணிப்பெண் வேலை உட்பட வேறு பல தொழில்களுக்காகவும் மத்திய கிழக்குக்குச் சென்ற நிலையில் துன்புறுத்தலுக்குள்ளாதல், மத்திய கிழக்கு நாட்டுச் சிறைக்கூடங்களில் அடைக்கப்படுதல், மனநிலைப் பாதிப்பு, வேதனம் வழங்கப்படாமை, வீஸா முடிவடைந்த பின்னரும் பலவந்தமாகத் தடுத்துவைத்தல், பாலியல் துஷ்பிரயோகம், வீடு மாறுதல், கறுப்புப்பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல் உட்பட  இம்சைகளுக்குள்ளாதல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தவர்களுக்கு தமது நிறுவனம் உதவி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத்திட்டம் கோறளைப்பற்று மத்தி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது 02 வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தமது நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராம மட்ட சமூகநலத் தயாரிப்பாளர்கள் மூலமாகவும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் மூலமாகவும் வெளிநாட்டில் நெருக்கடிகளுக்குள்ளான குடும்பங்களின் விவரங்களை பெற்று அவர்களது பிரச்சினைகளுக்கேற்ப தீர்வுகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர்  கூறினார்.

பாதுகாப்பாக, தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கும் தகவல் நிலையங்கள் மேற்குறிப்பிட்ட 03 பிரதேச செயலகங்களிலும் 'எஸ்கோ' நிறுவனத்தின் உதவியோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கணினி, சர்வதேசத் தொடர்புக்கான ஏற்பாடுகள் என்பனவும் 'எஸ்கோ' நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கும் மேலதிகமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புள்ள ஏனைய அலுவலர்களுக்கும், தொழில் நிமித்தம் பாதுகாப்பாக வெளிநாடு செல்வற்கு உத்தேசிப்போருக்கு தேவையான ஆலோசனைகளை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய பயிற்சிகளும் அறிவூட்டல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X