2025 மே 08, வியாழக்கிழமை

19ஆம் திகதி வாக்கெடுப்பில் டெலோ பங்கேற்காது

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரை வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் (டெலோ) சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார் என்று  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுக்கூட்டம், மட்டக்களப்பு கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத்திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது.

அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கே அந்த ஆதரவை வழங்கினோம். அவர்கள் எதனையும் தமிழர்களுக்கு வழங்கமாட்டார்கள் என்ற நிலைவரும்போது சர்வதேச சமூகத்திடம் நியாயமான கோரிக்கையினை முறையிடும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதனை ஆதரித்தோம்.

ஆனால், சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படாவிட்டால் மூன்றாவது வாசிப்பில் நடுநிலைவகிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கம், பொதுக்குழு கூட்டத்தில் எடுத்துள்ளோம்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடமும் கூறியுள்ளோம். அதன்காரணமாக வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் டெலோ வாக்களிக்காது.

தற்போது இரண்டு அரசியல் கைதிகள,  உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். இதில் ஒருவர் உதவி பொலிஸ் அத்தியட்சர். ஒருவர் சாட்சி சொல்ல வராததன் காரணமாக ஆறு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சரியான சந்தர்ப்பம் வரும்போது எனது நாடாளுமன்றப் பிரதிக்குழுக்கள் தலைவர் பதவியை நான் உதறிவிடுவேன்.

அரசாங்கத்துக்கு சந்தர்ப்பங்களை நாங்கள் முறையாக வழங்கவேண்டும். அந்த வகையில் நாங்கள் நல்லெண்ண சமிக்ஞையை வழங்கியுள்ளோம்.

இலங்கை அரசாங்கம் ஒருவருட காலத்துக்குள் அதாவது 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை எமது தலைவர் சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.

எங்களைப்பொறுத்தவரையில் சர்வதேசத்தின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. எங்களது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையில் தீர்வுத்திட்டத்தை வழங்குவதாக இருந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

அதனை இலங்கை அரசாங்கம் மறுக்கும் நிலையில் அதனைக்காட்டி இலங்கை அரசாங்கம் பழைய நிலையிலேயே உள்ளது என்பதை சர்வதேசத்திடம் காட்டி எமக்கான நியாயத்தைக் கோரமுடியும்.

எங்களது மக்களை நாங்களே ஆளக்கூடிய தீர்வை வழங்குமாறு ஐ.நா.சபையிலும் கோரிக்கையினை முன்வைக்கமுடியும். இலங்கை அரசாங்கத்துக்குக்கு சந்தர்ப்பங்களை வழங்காமல் எதிர்த்தோமானால் எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபிக்கமுடியாது. எனவே, இலங்கை அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம். அவர்கள் ஏமாற்றும் நிலையேற்பட்டால் அதனை தோலுரித்து சர்வதேசத்துக்கு காட்டும் நிலையை ஏற்படுத்துவோம் என்றார்.

கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உட்பட கட்சி முக்கிஸ்தர்களும் பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X