Suganthini Ratnam / 2016 ஜூலை 29 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஆலயங்கள் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் வித்தியாலயங்களுக்கு உதவினால் பிரமிக்க வைக்கும் கல்வி வளர்ச்சியை இந்த சமுதாயம் அடைந்துகொள்ள முடியும் என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி ஆர்வலர்களாலும் நலன் விரும்பிகளாலும் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான பாண்ட் வாத்திய இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாஸ்கரன் மேலும் கூறியதாவது, 'பாடசாலையையும் அதில் கற்கின்ற மாணவர்களின் கல்வியையும் வளர்த்தெடுப்பதில் சமூகம் ஆற்றும் பங்கும் பணியும் இன்றியமையாததாக இருக்கின்றது.
சில நாடுகளில் குறிப்பாக தாய்லாந்தில் சமூகம்தான் பாடசாலையை வழிநடத்துகின்றது. அங்கு உள்ளூராட்சி சபைகள்தான் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குகின்றன. இதனை நாங்கள் அங்கு சென்றிருந்தபோது நேரடியாகக் கண்டு கொண்டோம்.
இந்த நிலைமையை நமது நாட்டிலும் அமுல்படுத்துவதற்கு அரசு விரும்புகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலைமை வரும்பொழுது அதனை அமுல்படுத்துவதற்கு சமூகம் இப்பொழுதிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலவசக் கல்விக்காக நமது அரசு வேண்டிய அனைத்தையும் செய்திருக்கின்றது. இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், தளவாடங்கள், கட்டடங்கள், ஆசிரியர் சம்பளம் என்வனவற்றை வழங்குகின்றது.
இதற்கும் மேலதிகமாக மாணவர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களைக் கண்காணிக்கவும் என பிரதேச செயலகங்கள் தோறும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர், உளநல மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கடமையாற்றுகின்றார்கள், பொலிஸ் நிலையங்கள் தோறும் சிறுவர் பெண்கள் பிரிவு உள்ளது. இவர்களும் சிறுவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தவே உள்ளார்கள். இவை தவிர பல்வேறு நலன்விரும்பிகளும் கல்வி ஆர்வலர்களும் நிறுவனங்களும் கல்விக்காக உதவுகின்றனர்.
இத்தனை வசதி வாய்ப்புக்களையும் வைத்துக் கொண்டு நாம் இன்னும் கல்வியில் முன்னேறவில்லை என்றால் நம்மை விட துரதிருஷ்டசாலிகள் வேறு எங்கும் இருக்க முடியாது. எனவே, இந்த அரிய நல்ல வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு வீட்டுக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒழுக்கமுள்ள அறிவிற் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும்.
கல்வி அறிவின் ஊடாக அபிவிருத்தியையும் அமைதியான வாழ்வையும் அடைந்து கொள்ள முடியும்.
சமூகத்தின் சகல தரப்பாரும் பொறுப்பெடுத்து கல்வியை அபிவிருத்தி செய்வார்களாயின் எமது வளர்;ச்சி உலகை வியாபித்து நிற்கும் என்பதில் ஐயமில்லை' என்றார்.

12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago