2025 மே 26, திங்கட்கிழமை

'இந்தியப் பிரதமரின் வருகைக்கு யார் காரணமென தமிழ் அரசியல் தலைமைகள் சண்டையிடுகின்றார்கள்'

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கலந்துரையாடுவது என்று சிந்தித்து ஒன்றுபட்டுச் செயற்படாமல், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவதற்கு யார் காரணம் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றார்கள்;' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட தேவாபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில் புதிய சரஸ்வதி சிலையை  திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இந்தியப் பிரதமரின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், அவருடன் எமது பிரச்சினைகளைப் பற்றி தெளிவாகக் கலந்துரையாட வேண்டும்.

இந்நிலையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் தலைமைகள் ஒன்றுகூடிக் கலந்துரையாடி,   தீர்மானங்களை எடுத்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்' என்றார்.

'யுத்தம் முடிந்த பின்னர் எமது மாவட்ட எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களும்; மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையிலும் தமிழ் மக்களின் நிலங்களும்; பறி போகின்றன.

இதற்கு இங்குள்ள சில அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களின் சுயநலத்துக்காக உடந்தையாக உள்ளார்கள். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் காணிகள்  வழங்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்போது, அம்மக்கள் தங்களின் பிரதேசங்களில்; வாழ்வதற்கான காணிகள் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் எமது மாவட்டத்திலுள்ள மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும்; சிறந்த தொழிற்சாலைகளை இங்கு ஏற்படுத்தினால், அவற்றுக்கு நாங்கள் அனுமதியளிப்போம்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித நுண்கடன் நிறுவனங்களும் இயங்கவில்லை. மக்கள் நிம்மதியாக  இருந்தார்கள். ஆனால், தற்போது நுண்கடன் நிதி நிறுவனங்களில் மக்கள் கடன் பெற்று உறக்கம் இல்லாமல் அலைகின்றார்கள்' என்றார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X