2025 மே 14, புதன்கிழமை

'கிழக்கு மாகாணசபைக்கு வழங்கிய நிதியுதவி தொடர்பில் மீள்பரிசீலனை வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
 
கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி உதவியின் முறையற்ற வளப்பங்கீடு தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு கிழக்கு மாகாணசபையை கோருமாறு  ஐக்கிய அமெரிக்காவுக்கான உயர்ஸ்தானிகரிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) கேட்டுக்கொண்டுள்ளார்.
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மாகாணத்திலுள்ள 8 பாடசாலைகளுடைய அபிவிருத்திக்கென யு.எஸ்.எயிட்டினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
  ந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
'கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக தங்களது கரிசனைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் எனது மேலான நன்றி. தங்களது அபிவிருத்தி நிதி உதவிகள் எமது மாகாணத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தர வேண்டியதும் எனது கடமையாகும்.

இலங்கையில் இன, அரசியல், பிரச்சினை தோற்றுவதற்கு அடிப்படைக் காரணமே வளப்பங்கீடுகளில் ஏற்பட்ட சமத்துவமின்மையேயாகும். இதனாலேயே இன்று இலங்கை இன, மத, மொழி ரீதியாக துருவப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டும் என்பதில்லை. அந்த வகையில் யு.எஸ்.எயிட் உதவி மூலம் பாடசாலை அபிவிருத்திக்காக எட்டு பாடசாலைகள் கிழக்கு மாகாணசபை ஊடாக தெரிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் நான் அறிந்துகொண்டேன். இத்தெரிவு தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்களுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் தங்களது கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.

கிழக்கு மாகாணசபை உயர் அதிகாரபீடம் இத்தெரிவு தொடர்பாக முற்றுமுழுதாக இனவாத அடிப்படையில் செயற்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட எட்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் முஸ்லீம் பாடசாலைகள் என்பதுடன் தமிழ் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது பாடசாலை கூட 50மூ க்கு மேல் முஸ்லீம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையாகும். இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகள் தமிழ், முஸ்லீம் பாடசாலைகள் என்றே உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்தவகையில் கிழக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட தங்களது நிதி உதவியினைக்கூட சமமாக பகிரப்பட முடியாத நிலையே எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறையற்ற வளப்பங்கீடு தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு கிழக்கு மாகாணசபையினை கோருமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
 
எதிர்காலத்தில் தங்களது அரசு சார்ந்த நிதியுதவிகளை இலங்கை அரசு சார்பாகவோ அல்லது மாகாணசபை ஊடாகவோ வழங்கும் போது இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் என்பதனை உதவி நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளடக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் தங்களிடம் முன்வைக்கின்றேன். இது எதிர்காலத்திலாவது வளப்பங்கீடுகள் சமமான முறையில் பகிரப்படுவதற்கு வழிவகுக்குமென நம்புகிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X