2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'கடந்த ஆட்சியில் கிழக்கு மாகாணசபையால் 'தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி காணப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 10 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையின் கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் முதலமைச்சராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தபோதிலும், இம்மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்;களில் அபிவிருத்தி காணப்படவில்லை என மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தில் 40 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'கிழக்கு மாகாணசபையின் தற்போதைய ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் கடந்த இரண்டரை வருட ஆட்சியில்  முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் இருந்தார். இருப்பினும், அவரினால் முஸ்லிம் பிரதேசங்;கள் மாத்திரமல்ல, ஏனைய பிரதேசங்களிலும் அபிவிருத்தி காணப்படவில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபையில் அனைத்துச் சமூகங்களையும் இணைத்துக்கொண்டதாக ஆட்சி ஏற்படுத்தப்பட்டு, செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டு ஆட்சி இடம்பெற்று வருகின்றது.

இப்போதைய கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் இன வேறுபாடு அற்ற வகையில் அனைத்துச் சமூகங்களும் உள்வாங்கப்பட்டு, அனைத்துப் பிரதேசங்களிலும் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வருடத்தை விட, இந்த வருடத்தில் கிழக்கு மாகாணசபையினால் கல்விக்காக 7,500 மில்லியன் ரூபாயை  மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கொண்டுவந்து அதனைப் பாகுபாடின்றி மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் சகல பாடசாலைகளிலும் அபிவிருத்திப்பணி முன்னெடுக்கப்படுகின்றது' என்றார்.  

'மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக இருந்தபோதிலும், ஆட்சி மாற்றத்தின் ஊடாக எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் நடைபெறவில்லை. இது கவலை அளிக்கின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகள் இந்த நல்லாட்சியிலும் இடம்பெற ஆரம்பித்துள்ளது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் பௌத்த சிலைகள் வைக்கப்படுகின்றன. இதற்கு நல்லாட்சியிலுள்ள அமைச்சர் ஒருவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

இவ்வாறான செயற்பாடுகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தி அனைத்துச் சமூகங்களும் நிம்மதியாகவும் சமாதானத்துடனும் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X