2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'சிற்றூழியர் வெற்றிடங்கள்: பெரும்பான்மையினத்தவர்கள் நியமிக்கப்படுவதால் பிரச்சினைகள் உருவாகலாம்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் சிற்றூழியர் வெற்றிடங்களுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதன் காரணமாக பிரச்சினைகள் உருவாகலாம்; என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது நல்லாட்சியை தவறாக வழிநடத்தும் முறையாகவும் அமையும் எனவும் அவர் கூறினார்.  

'மத்திய அரசுக்கு பகிரங்க வேண்டுகோள்' என்று தலைப்பிட்டு ஜனாதிபதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 150 க்கும் மேற்பட்ட  சிற்றூழியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தன.

இந்நிலையில், இவ்வைத்தியசாலையில் காணப்பட்ட மேற்படி வெற்றிடங்களுக்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 125 பேர் கடந்த 02ஆம் திகதிவரை இடமாற்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

'பெரும்பான்மை இனத்தவர்களின் பல  பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் தேவைப்படும்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மட்டும் ஏன் இடமாற்ற அடிப்படையில் சிற்றூழியர் வெற்றிடங்கள் நிரப்படப்பட வேண்டும்?

வேறு வைத்தியசாலைகளிலிருந்து இடமாற்ற அடிப்படையில் இவ்வைத்தியசாலைக்கு சிற்றூழியர்களை நியமித்துள்ளமை தவறான அணுகுமுறையாகும்' என்றார்.  

'மேலும், இவ்வைத்தியசாலைக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட சிற்றூழியர் நியமனத்தில் மொழி தெரியாத காரணத்தால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.  இதில் இன ரீதியான விகிதாசாரம் பேணப்படவில்லை என்பதுடன், முறையான ஒழுங்கு கடைப்பிடிக்கப்படவில்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. இதனைப் பரிசீலித்து  தமிழர்களை இந்த வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு  ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X