Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
'தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழலை குழப்புவதற்கு சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், நிதானத்துடன் செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உணவு விவசாய ஸ்தாபனத்தால் மட்டக்களப்பு, கரடியனாறுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சேவைக்காலப் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'புதிதாக உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தில் சிறுபான்மையின மக்களின் சுயநிர்ணய உரிமை சரியான முறையில் கையாளப்பட்டு, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த அதிகாரத்தில் நாடாளுமன்றம் தனது பெரும்பான்மையைக் காரணம் காட்டி அதனைப் பறித்தெடுக்க முடியாத வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம்' என்றார்.
'கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேவையான வளங்கள் காணப்படுகின்றபோதிலும், சரியான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. வரவிருக்கின்ற அரசியல் சாசனத்தில் பிராந்தியங்களுக்கான அதிகாரம் வழங்கப்படுவதும்; வழங்கப்படும் விடயங்களை முழுமையாகக் கையாளுவதும் அதற்கான சட்டங்களை ஆக்குவதற்கான புதிய அரசியல் சாசனமொன்றை நோக்கி நாம் நகர்கின்றோம்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததை அடுத்து, சிறுபான்மையின மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எங்களின்; தலைவர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு, இளைஞர்களின் கைகளுக்குச் சென்று அவர்கள் நெருப்பாய் விளையாடியமை எங்களது வரலாற்றில் அழிக்கமுடியாத வடுக்களாக இருக்கின்றன.
தற்போது பெரும்பான்மையினக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை மிக நிதானமாகக் கையாள வேண்டும். தமிழ் பேசும் மக்கள் ஒரே நோக்கில் செயற்பட வேண்டும்.
கடந்த காலத்தில்; சமாதானத்துக்காக வந்த வாய்ப்பை நாங்கள் மறக்கக்கூடாது. இன்னுமொரு முறை இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், எமது நிலைமை என்னவாகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago