Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தில் 2,700 சமுர்த்தி முகாமையாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுகின்ற 2,100 பேர், முகாமையாளர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர். ஏனைய 600 பேர் புதிததாக இணைப்படவுள்ளனர்.
இதேவேளை, வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தில் 600 உதவிப் பணிப்பாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், சமுர்த்தி முகாமையாளர்களாகக் கடமையாற்றுவோருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாழ்வின் எழுச்சித் திணைக்கள முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுடனான சந்திப்பு, தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை (06) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நலன் உதவிகள் வழங்குவதால் மட்டும் வறுமையைக் குறைக்க முடியாது. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் நிரந்தர வருமானத்தைப் பெறும் வகையில் மூலதன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதற்காகவே சமுர்த்தி உதவியில் சிறு தொகை சேமிப்பாக மாற்றப்படுகின்றது' என்றார்.
மேலும், வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தை வினைத்திறனுடையதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வாழ்வின் எழுச்சித் திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன' என்றார்.
'கடந்த காலத்தில் வாழ்வின் எழுச்சித் திணைக்களமூடாக பல்வேறு கடன்கள் பல்வேறு வட்டி வீதங்களில் வழங்கப்பட்டு பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைச் சீர்செய்து பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த கடன் பெறுவதற்கான நடைமுறை தற்போது எடுக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் கிராம மட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் கிராமங்கள் தோறும் வறுமை நிலைமையைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டம்; தயாரிக்கப்பட்டு, அவை சட்டமாக்கப்படுவதற்காக சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டு, வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்படவுள்ளது' என்றார்.
'சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகளை பகலில் சமுர்த்தி வங்கியில் வைக்கவேண்டும். இரவில் வங்கியின் காவலாலியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சமுர்த்தி வங்கிகளூடாக அடகு பிடிக்கும் சேவையை ஆரம்பிக்கவுள்ளோம். அடகு பிடிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டியவர்கள் பிரதேச செயலாளர்களாவர். அடகு பிடிக்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டவுடன்; சமுர்த்தி வங்கிக்கு துப்பாக்கி கட்டாயமாகத் தேவைப்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago