2025 மே 07, புதன்கிழமை

“தொல்லையின்றி வாழ இன ஐக்கியம் இன்றியமையாதது”

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எல்லைப் புறக் கிராமங்களில் தொல்லையின்றி வாழ தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்தார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் ஊரை விட்டு சிதைந்து சின்னாபின்னமாகி வாழ்பவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான மர நடுகைப் பிரார்த்தனை நிகழ்வு மட்டக்களப்பு, ஏறாவூர்-1,  ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் பேசும் மக்கள் என்று குறிப்பிடுகின்ற போது அது தமிழர்களையும் முஸ்லிம்களையும் தான் குறிக்கும்.

'மட்டக்களப்பு மான்மியம்' என்கின்ற வரலாற்று நூலைப் புரட்டிப் பார்த்தால் அதில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கின்ற தாய் வழி உறவு எவ்வளவு பலமும் மகிமையும் நிறைந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆகையினால் இந்தப் பிரதேசத்து முஸ்லிம்களின் தாய்வழி தமிழ் மாதர்கள் என்பதை மனதில் வைத்து சமூகக் கலவரங்களுக்குத் தூபமிட நினைப்போரை நாம் விரட்டியடிக்க வேண்டும்.

ஏறாவூர் மாரியம்மன் கோயிலை நிர்மாணிப்பதில் ஏறாவூர் முஸ்லிம்கள் தங்களாலான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்ற வரலாற்றைப் புரிந்து கொண்டு இனக் கலவரங்களுக்கு வழி விடாமல் இனங்கள் இணைந்த அமைதி வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் நாம் வழி காட்டியாக வேண்டும்.

தமிழரசுக்கட்சி தோன்றியபோது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் தமிழரசுக் கட்சியோடு இணைந்து தந்தை செல்வாவுடன் பக்கபலமாக நின்றுதான் சிறுபான்மையினரின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.

அப்போதெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவென்பது தாய்வழி தொப்புள் கொடி உறவாக, உயிரோட்டமாக இருந்தது.

ஆனால். அதற்குப் பின்னர் வந்த சுய நல அரசியல்வாதிகளால் தமிழ் ,முஸ்லிம் மக்களின் உறவு என்பது கன கச்சிதமாக திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.இதில் சிக்கிக் கொண்டதால் தான் நாம் அனைத்தையும் இழந்தோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X