2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தசாப்தமாகியும் சட்டத்தின் முன் கொலையாளிகள் நிறுத்தப்படவில்லை'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிரெஞ்சு தொண்டர் நிறுவனமான ஏ.சி.எப் என்றழைக்கப்பட்ட 'அக்ஷன் கொன்ரே லா பெயிம்' நிறுவனத்தின் உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைச் சூத்திரதாரிகள், 10 வருடங்களாகியும் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை குறித்து, உறவினர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த 2006ஆம் ஆண்டில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரில், இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்ற காலப் பகுதியில், இந்த படுகொலைச் சம்பவம் நடந்தது.

விடுதலைப் புலிகள், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்துவிட்ட நிலையில், இரு தரப்புக்குமிடையில் மோதலும் தீவிரமடைந்திருந்தது. மூதூர் நகரில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த அலுவலகத்துக்குள் வைத்தே, இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று, வழமை போல் கடமையின் நிமித்தம் அலுவலகத்துக்குச்  சென்றிருந்த பணியாளர்கள், மோதல் காரணமாக  அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் தான், அங்கேயே தங்கியிருந்ததாகக்   கூறப்படுகின்றது.

தொலைபேசி ஊடாக, உறவினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருந்த போதிலும், 3ஆம் திகதியுடன், அத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டதாக, உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தின் போது, அங்கு 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர்ப் பணியாளர்கள் மட்டுமே தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்த அனைவரும் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் தகப்பன், மகள் உட்பட 16 பேர் தமிழர்கள் என்றும் மற்றையவர் முஸ்லிம் என்றும் கூறப்பட்டது.

இச்சம்பவம் இடம்பெற்று இப்பொழுது 10 வருடங்களாகின்ற நிலையில், இந்த சம்பவத்தில்   ஏற்பட்ட உளப் பாதிப்புக்களிலிருந்து தாங்கள் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை என்று உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து  ஆராய்வதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  நியமிக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றம், நம்பகத்தன்மையுடன் விசாரணைகளை நடத்தி, நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அந்த அமைப்பு, சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையொன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X