2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சி அரசாங்கத்தின் பொறிமுறைகள் சிறந்ததாக மாறவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நல்லாட்சி அரசாங்கத்தின் பொறிமுறைகள் சிறந்ததாக மாறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்புத் தொடர்பான வதிவிடச் செயலமர்வு மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரசேத்திலுள்ள அமாயா சுற்றுலா விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில், 'சட்டத்தையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையின் கடந்த ஆட்சியாளர்கள் இன்னொருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, தாங்கள் விரும்பியவர்களுக்கு நிவாரணங்களை மக்கள் சார்பாக வழங்கினார்கள்.

யுத்தமும் மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதுவும் மோசமான ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட விடயம். இதனை உலகம் நன்கு அறியும்' என்றார்.

'இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சில பிற்போக்குவாதச் சக்திகளுக்கு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒருபோதும் சட்டத்துக்கு தலைவணங்கவில்லை.

மதவாத, இனவாத குறுகிய அரசியல் மனோநிலை கொண்ட குழுக்களுக்கு ஆட்சியாளர்கள் அடிபணிந்தனரே தவிர, இலங்கைச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள நீதிக்கு தலைவணங்கவில்லை.

இலங்கையில் ஏற்பட்ட சிவில் ஆயுத முரண்பாட்டில் பங்கெடுத்த இனக்குழுக்கள் இருக்கின்றன. இந்த ஆயுத மோதல்களின் விளைவாக மூன்றாந்தரப்பாக, நடுநிலையாக இருந்த முஸ்லிம் இனமும் ஆயுத முரண்பாட்டுக்குள் அகப்பட்டு ஒட்டுமொத்த நாடும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்து பாரிய அவலத்தில் ஆயுத மோதல் முடிந்தது' என்றார்.

'இலங்கை ஆட்சியாளர்களுக்கிடையில் விரும்பியதை விரும்பியவாறு செய்துகொண்டு செல்லும் கலாசாரம் உள்ளதால், நாட்டுக்கு இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டுக்குள் சகல இன மக்களும் அனைத்து நியாயங்களையும் பெறவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
மாற்றத்தை விரும்பிய நல்லவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிவில் சமூக மனநிலை மாற்றம் வேறு தெரிவுகளின்றிய நிலையில் நல்லாட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக நல்லாட்சியில் நாடு எதிர்பார்த்த நல்லது நடக்கவில்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X