2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'புதிய அரசியல் யாப்பில் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய அரசியல் யாப்பில் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு பிரகடனம் செய்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) மாலை நடைபெற்ற கூட்டத்தின்போதே, இந்தப் பிரகடனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கையின் சனத்தொகையில் 51.8 சதவீதமாக பெண்களை மனிதகுலம் சரிசமமாக நடத்துகிறதா? பெண்களுக்கான சமூகநீதி உறுதிப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் எம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.

 'கலை, கலாசாரம், பண்பாடு, மதம் என்ற பேரில்; பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை தொடர்ந்துகொண்டு பெண் உரிமைக் கோஷங்களை அள்ளி வீசுவதால் எந்தப்; பயனுமில்லை. எமது குடும்பச் சமூக சிந்தனையோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

அரசியல் பரப்பில் இது பற்றிய தீவிர விவாதங்களும் முடிவுகளும் எய்தப்படவேண்டும். இன்றைய நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எமது மக்களின் ஆணையை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் தலைமைகள் இது பற்றி அக்கறை கொள்வதில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற காலாவதியான சிந்தனை தூசு தட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டுவரப்படுகின்றது.

தற்போது பெண்கள் எதிர்கொள்கின்ற குடும்ப வன்முறைகளும் பாலியல்க்; கொடுமைகளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்கின்ற  பிரச்சினைகளும் புறமொதுக்கப்படுகின்ற அவலம் காணப்படுகின்றது. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை திசைதிருப்ப மட்டுமே இந்த இனவாதக் கோஷங்கள் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வடக்கு, கிழக்கு இணைந்துவிட்டால் மட்டும் பெண்ணடிமை தீர்ந்து விடுமா?  குறிப்பாக தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள பெண்கள் மீதான ஆதிக்க மனோபாவம் எப்படி ஒழிக்கப்படும்? எனவே, சமூகக் கொடுமைகளை திசை திருப்பி எமது மக்களை ஏமாற்றும் தலைமைகளை நாம் இனங்காண வேண்டும்.

இந்த இனவாத அரசியலுக்கு அப்பால் நல்லாட்சி, இனப்பிரச்சினைத் தீர்வு, சமூகநீதி, சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றில் பெண்களின் கருத்துகளும் பங்களிப்புகளும் உள்வாங்கப்படுவதனூடாக அவை முழுமை பெறுமென உறுதியாக நம்புகிறோம். எனவே கலை, கலாசார, அரசியல், சமூக, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் தீர்மானச் சக்திகளாக பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் பொருட்டு உள்ளூராட்சிமன்றங்களில் 33 சதவீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த சபைகளில் 50 சதவீதமும் இடம்பெறும் வகையில்; பெண்களின் பிரதிநிதித்துவப் பங்களிப்பை புதிய அரசியல் யாப்பு உறுதிசெய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X