2025 மே 14, புதன்கிழமை

'முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கிகரிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறுமாயின், அதில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கிகரிக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், '60 ஆண்டுகளாக பரஸ்பர அரசியல் எதிரிகளாக இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதிசயிக்கத்தக்க வகையில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இவ்விரு கட்சிகளிலும் உள்ள தாராளவாதிகளும் மிதவாதிகளும் இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மிகவும் உறுதியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

தேசிய, சர்வதேசிய சக்திகள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தீர்வை  'ஒரு பொதிக்குள்' அடக்கி வழங்கவே விரும்புவதாகத் தெரிகின்றது. இத்தருணத்தில்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்குள் தத்தமது சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தீர்வுக்கான அடிப்படையான விடயங்களில் அவசரமாக உடன்பாடு காணவேண்டியது அவசியமாகும்' என்றார்.

30 வருடகால யுத்தத்தில் பங்காளியாக இருக்காதபோதும், அழிவுகளைச் சந்தித்த ஒரு சமூகத்தின் அரசியல் கட்சி என்ற வகையில் தற்போதைய புதிய சூழலில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்காது. இதற்காக சர்வதேச ஆதரவைத் திரட்டுதல், முஸ்லிம் அரசியல் அபிலாஷையை தேசிய ரீதியாக சந்தைப்படுத்தல், சமூகத்தை விழிப்பூட்டுதல் ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபடும்.

ஜனநாயக ரீதியில் உரிமைக்காகப் போராடுவதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. எவருக்காகவும், எதற்காகவும் எமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. உரிமைக்கான குரலாகவும், போராட்டமாகவும் நமது அரசியல் இல்லாதுபோனால் தனிக்கட்சியின் தோற்றத்துக்கான அடிப்படையையே உதாசீனம் செய்தவர்களாவோம்.
முஸ்லிம்களுக்கான தனி அரசியல் அடையாளம் பெரும்பான்மை முஸ்லிம் அலகின் ஊடாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கை தற்காலிகமான வெற்றுக் கோஷமாக இருக்க வேண்டும் என்று எவரேனும் கருதினால், முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பம் தொட்டு இன்று வரை எடுத்த எல்லா அரசியல் முன்னெடுப்புகளும் ஓர் ஏமாற்று நாடகமாக அமைந்துவிடும். இதனை வெறும் கோஷமாக நாம் கருதினால் இது தலைவர் அஷ்ரஃபுக்கு செய்யும் மாபெரும் துரோகமுமாகும்.

பேசாதிருக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பெரும்பான்மை அலகுக் கோரிக்கை காலாவதியாகிவிட்டது எனக் கருதுகிறார்களா? அப்படிக் கருதுவோரிடம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கால அளவு வழங்கப்பட்டிருந்ததா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது. மற்றும் யுத்தம் முடிந்துவிட்டது என்பதை தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்பதாகக் கருதுவோரும் உண்டு. இதுவொரு பெருந்தேசிய அடிப்படைவாதக் கருத்தாகும். இப்போதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்று பேசுகிறவர்களே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றார்கள். இக்காலகட்டத்தில், இனப்பிரச்சினைத் தீர்வுக்குள்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் தீர்வுள்ளது என்பதையும், இத்தீர்வு நிலத்தொடர்ப்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை அலகுதான் என்பதையும், கிழக்கிற்குள்தான் இவ்வலகு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுதல் தீர்வு விடயத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் 19ம் திகதி நடைபெறவிருக்கும் 19ஆவது தேசிய மாநாடு முஸ்லிம்களின் உரிமைக்கான அறைகூவலை விடுக்கும் பாரிய ஒன்றுகூடலாக அமைவதற்கு கீழ்க்காணும் ஐந்து கோரிக்கைகளையும் மாநாட்டுத் தீர்மானமாக முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும் என்று தலைவர், அதியுயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை அலகு உருவாக்கப்படல் வேண்டும். கரையோர மாவட்டம் வரைவு செய்யப்படல் வேண்டும்.
 
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படல் வேண்டும்.
சாய்ந்தமருது, வாழைச்சேனை மத்தி, குறிஞ்சாக்கேணி ஆகிய புதிய பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும்' என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X