2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களின் குரலை நசுக்குவதற்காக பலர் ஒன்றிணைந்துள்ளனர்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலை நசுக்குவதற்காக இப்பொழுது பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் எழுச்சி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சிய முஸ்லிம் தர்ம கொடை நிதி' அமைப்பினால்,  மட்டக்களப்பு ஏறாவூரில் 500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(22) மாலை ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போது ஒற்றுமைப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களுக்குள் எவ்வாறோ குழப்பத்தை உருவாக்குவதற்குக் காத்திருந்த வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டில் பணத்துக்கு அடிமையாகும் ஒரு சில புல்லுருவிகள் பலிக்கடாவாகி விட்டார்கள்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் மசிய மாட்டார்கள் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இலங்கை முஸ்லிம்களின் அடையாளக் குரலை நசுக்குவதற்கு அவர்கள் கங்கணம் கட்டி நிற்கன்றார்கள். அதற்கு நம்மவர்களில் உள்ள நயவஞ்சகர்கள் ஒரு சிலர் துணைபோயிருக்கின்றார்கள்.

இந்த விடயத்திலே முஸ்லிம் சமூகம் முன்னரை விட இனி மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியிருக்கின்றது என்றார்.

“கடந்த காலத்திலே முஸ்லிம்களை ஓர் இனமாகக் கூட அங்கிகரிப்பதற்கு தீவிரப்போக்குடையவர்கள் மறுத்து வந்த நேரத்தில் இலங்கை அரசியலுக்குள் ஸ்ரீலமுகா உட்புகுந்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்தவக் குரலையும் அடையாளத்தையும் சர்வதேசமெங்கிலும் பெற்றுத் தந்தது.

இதனைச் சகித்துக் கொள்ள முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்த இப்பொழுது தமது காய்நகர்த்தல்களை முஸ்லிம் சமூக புல்லுருவிகளைக் கொண்டே ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஸ்ரீல.மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது நாம் இந்த சமூகத்தை வழிநடத்தக் கூடியவர் என்கின்ற அத்தனை நம்பிக்கைகளையும் வைத்திருக்கின்றோம்.

அவரிடம் ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய எல்லா ஆளுமையும், ஆற்றலும் அனுபவமும் உண்டு. இதனை முஸ்லிம் சமூகம் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆயினும், எமது சமூகத்தைக் கொச்சைப் படுத்த நினைக்கின்ற நாசகார சக்திகள் இந்த சமூகத்தைப் பற்றிக் கதைக்க எந்தவித திராணியுமற்றவர்கள்.

கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் இருந்து கொண்டு இத்தகைய நயஞ்சகத்தனமான நாசகார வேலைகளைச் செய்பவர்களை சமூகம் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் என்கின்ற அசையாத நம்பிக்கை எமக்குண்டு. எமது சமூகம் ஒருபோதும் தோற்றுவிடாது. ஸ்ரீல.மு.கா கட்சியும் அதன் தலைமையும் ஏனைய உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் மிகுந்த பலத்துடன் உள்ளார்கள்”  எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X