2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'மட்டு. மத்தி வலயக் கல்வி அலுவலகம் ஓய்வூதியர்களை ஓரங்கட்டுகிறது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் ஓய்வூதியர்களை ஓரங்கட்டுகிறதென பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க்கிளை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் பகிரங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க் கிளையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.எம்.அபுல் ஹஸன் மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் ஆகியோர் கையொப்பமிட்டு இன்று புதன்கிழமை  விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 'ஓய்வூதியர்களுக்கு அரசங்கத்தால் வழங்கப்படும் நன்மைகளைத் தடையின்றிப் பெறுவதில்; மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அசமந்தப்போக்குடன் நடந்துகொள்வது சம்பந்தமாக எமது பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க் கிளையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓய்வூதியர்களின் உத்தியோகபூர்வமான எந்தவொரு அலுவல்களையும் உரியவேளைக்கு முடிக்க இயலாமல் நாம் தி;ண்டாடுகின்றோம். இந்நிலைமையால், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேறுபடித்தரங்களிலுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது விடயமாக நாம் எமது குறைபாடுகளை பல தடவைகள் எடுத்துக்கூறியும் இந்த வலயக் கல்வி அலுவலகத்திலுள்ள அதிகாரிகள் அதற்குத் தீர்வு பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. இதனால், எமது ஓய்வூதிய நிலுவைகளை உரியவேளைக்குப் பெற முடியாமலுள்ளது.

இந்தத் தாமதம் காரணமாக ஓய்வூதியர்களின் அலுவல்களை முடித்துக்கொள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் 6 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம்  வரை செல்கின்றது.

ஆசிரியர் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கள் தொடர்பான பதவி உயர்வுகளிலுள்ள நிலுவைகள், உள்ளீர்ப்புக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல், ஓய்வுபெற்றமைக்கான அனுமதிக் கடிதங்களை வழங்குவதில் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.

சம்பள அதிகரிப்புக்கள், பதவி உயர்வுகள் சம்பந்தமாக புதிய சுற்றுநிரூபங்கள் வரும்போது ஓய்வூதியர்களும் அந்த நலன்களுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். அவ்வேளையில் ஓய்வூதியர்களும் தமது சுய தரவுகளைச் சமர்ப்பித்து மேற்படி அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதுபற்றி வலயக் கல்வி அலுவலகம் ஓய்வூதியர்களுக்கு அறிவிப்பதில்லை.

ஓய்வூதியர்களின் தரவுப்படிவங்கள் வலயக் கல்வி அலுவலகத்தினால் மாகாணக் கல்வி அலுவலகத்திற்கு உரிய காலத்தில் உரிய முறைப்படி அனுப்பப்படுவதில்லை. தரவுப்படிவங்கள் மாகாணக் கல்வி அலுவலகத்தினூடாக மத்திய கல்வி அமைச்சுக்குச் சேர்ப்பிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அந்தத் தகவல்கள் அறிவிக்கப்படுவதுமில்லை.

உதாரணமாக ஒரு அதிபரோ ஆசிரியரோ ஓய்வு பெற்றால் அவராகவே வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று தனக்குரிய அனுகூலங்களைப் பற்றியும் தான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்கள் பற்றியும் கேட்டால் மாத்திரமே அது பற்றிக் கூறப்படுகிறதே தவிர பொதுவாக இந்த விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

சேவையிலிருக்கும் போது அதிபரிடமோ, ஆசிரியரிடமோ சுய தரவுகளைப் பெற்றுக்கொண்டு சுய கோவைகள் சீர்செய்யப்படுவதில்லை. ஓய்வூதியர் கேள்வி எழுப்பும் பட்சத்தில் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது மற்றெல்லா கல்வி அலுவலகங்களுடாகவும் விதவைகள் அநாதைகள் பணிக்கொடைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஒன்லைனில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்போது இந்த அலுவலகம் இன்னமும் அதனை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. எனவே, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இந்த நிருவாக சீர்கேடு விடயமாக மாகாண கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X