2025 மே 26, திங்கட்கிழமை

'வடக்கு, கிழக்கு இணைப்பு; முஸ்லிம்;களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மே 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் முஸ்லிம்;களின் அச்சத்தை தமிழ்த் தலைமைகள் போக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு நடைபெற்ற மு.காவின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் அதிகம் பேசி வரும் தமிழ்த் தரப்பினர், இந்த மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.

அம்பாறையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதே சிறுபான்மைச் சமூகத்துக்குப் பாதுகாப்பு என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்படுவதால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்குக் கடந்தகால கசப்பான அனுபவங்களே காரணமாகும்' என்றார்.  

'தமிழர்கள் பெரும்பான்மையாக ஆட்சி அல்லது நிர்வாகம் செய்த பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்ட வரலாறு, அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் தற்போதும் அவர்கள் பேசி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை இயங்கிய நிர்வாக காலப்பகுதியில் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, காணி உரிமை தொடர்பில் வடக்கு, கிழக்கு  மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டனர்.

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவிய சூழ்நிலையில்,  அவர்களின் காணிகள் ஆயுதமுனையில் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமை மாற்றம் வழங்கி, முஸ்லிம்களின் காணி உரிமையை இல்லாதொழிக்கும் காரியத்தை அரச அதிகாரிகள் செய்திருந்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் அரச அதிகாரிகளாக தமிழர்களே காணப்பட்டனர்.

மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும்போது, கிழக்கு மாகாணத்தில்; ஏனைய இனங்களுடன் ஒப்பிடுகையில் சம இனப்பரம்பல் அல்லது சற்றுக்கூடிய நிலையில் காணப்படும் முஸ்லிம்கள், திடீரெனச் சிறுபான்மையாக மாறும் நிலைமையே முஸ்லிம்களை அச்சமடையச் செய்துள்ளது.

இந்த மாகாணங்கள் இணைக்கப்படும்போது,  தமிழர்களின் பெரும்பான்மைப் பலம் அதிகரிப்பதுடன், முஸ்லிம்கள் சிறுபான்மையாகிவிடும் நிலைiயும் உண்டு. எனவே, முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்கும் கடப்பாடு தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X