2025 மே 26, திங்கட்கிழமை

'வடக்கு, கிழக்கில் காணப்பட்ட கல்வியறிவு வீதம் வீழ்ச்சியடைகின்றது'

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

'யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர் நிலையில் காணப்பட்ட கல்வி அறிவு வீதம் தற்போது வீழ்ச்சி அடைந்துகொண்டு வருகின்றது' எனத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

'2009ஆம் ஆண்டுக்கு முன்னர், தமிழ்ச் சமூகமானது யுத்தத்தின் மூலமும் இனவாதிகள் மற்றும் மதவாதிகளாலும் நேரடியாக நசுக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர், எமது மாணவர்களின் கல்வி மறைமுகமாக நசுக்கப்படுவதை நான் அவதானித்து வருகின்றேன்' எனவும் அவர் கூறினார்.

செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும்; சஞ்சிகை வெளியீடு நிகழ்வும்  ஞாயிற்றுக்கிழமை (7) மாலை நடைபெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மதுபானப் பாவனையில் முன்னிலையிலுள்ள மட்டக்களப்பு மாவட்டமானது, தற்போது தற்கொலையிலும் முன்னிலையிலுள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள பல இளைஞர், யுவதிகள்  சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் நம்பிக்கையை இழந்து தற்கொலை மூலம் தமது  உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள்.  

எனவே, எமது அடுத்த தலைமுறையானது,  இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடாமல் இருப்பதற்காக எதிர்காலம் குறித்த நம்பிக்கையை பிள்ளைகளுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும்  ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

'தென்னிலங்கையில் மூடப்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிதி நிறுவனங்கள்  இங்கு வட்டிக்கு கடன் வழங்குகின்றது. இவற்றில் கடன் பெற்றவர்கள், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்கின்றார்கள்.
 
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகையின் அடிப்படையில் 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் 40 மதுபானசாலைகள் மேலதிகமாக இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  

யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கபட்ட அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் வாகரை, கரடியனாறு, கொக்கொட்டிச்சோலை, பட்டிப்பளை போன்ற பகுதிகளில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X