2025 மே 02, வெள்ளிக்கிழமை

14 பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இயங்காதுள்ளன

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


2012ஆம் ஆண்டு கிழக்கில் நடத்தப்பட்ட தெயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இன்னமும் வெறும் கட்டடங்களாக காட்சி தருகின்றன. இவற்றில் இதுவரை கணினிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆய்வுகூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அவை கடந்த 02 வருடங்களாக கணினிகள் இல்லாது வெறும் கட்டடங்களாக இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பிரிவுக் கூடாக தெயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு இந்தக் கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கட்டடங்கள் அமைக்கப்பட்டு 02 வருடங்களாகின்ற  நிலையில்,  மாணவர்கள் தமது கணினி தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட கணினிகள் இன்னமும் உரிய பாடசாலைகளுக்கு கையளிக்கப்படவில்லை.

கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் வெறுமனே உள்ளன.  அதிகாரிகள் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2012ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 22 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம் அமைப்பதற்கான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டு கட்டடம் மாத்திரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகூடத்திற்குத் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 21 கணினிகள் தரப்படவில்லை என்று மட்டக்களப்பு ஐயன்கேணி தமிழ் வித்தியாலய அதிபர் சதாசிவம் ஜெயராஜா கூறினார்.

இதுவிடயமாக தாங்கள் தொடர்ந்து கேட்டவண்ணமே உள்ளதாகவும் அதிகாரிகள் தருவதாக சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஒட்டுமொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டின் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கட்டி முடிக்கப்பட்ட கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக பாழடைந்து வருகின்றன என்பது மட்டும் உண்மை.

மட்டக்களப்பு மங்களராமய வித்தியாலயம், கிரான் ரமண மகரிஷி வித்தியாலயம், ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், 40ஆம் வட்டை விபுலாநந்தா வித்தியாலயம், வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயம், காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம், வெல்லாவெளி-சின்னவத்தை ஆனைகட்டியவெளி வித்தியாலயம், மண்டூர் 13ஆம் கொலனி விக்னேஸ்வரா வித்தியாலயம், திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயம், பிறைந்துரைச்சேனை வித்தியாலயம், தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம்  ஆகிய 14 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்களே கணினிகள் வழங்கப்படாது பாழடைந்து வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X