2026 மே 05, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காக இந்திய எம்.பிகளை சந்திக்கவில்லை: சீ.யோகேஸ்வரன்

Super User   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

தமிழ் நாட்டு மக்களின் உணர்வலைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் எமது மாவட்ட தமிழ் மக்களிடமிருந்து பரவலாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் காரணமாகவும் மட்டு. மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகள் பலரின் ஆலோசனையிலுமே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடனான சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்; தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

இது குறித்து அவரிடம் வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியினால் அறிவிக்கப்பட்டது. அவ்வேளை நாங்கள் மூவரும் மாவட்டத்திலேயே தங்கியிருந்தோம். சந்திப்பிற்கு முதல் நாள் இது பற்றி எமக்கு அறிவிக்கப்பட்டது.

சந்திப்பில் நாம் கலந்துகொள்ளாவிட்டாலும் எமது தலைவர் இரா.சம்பந்தன் சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் உட்பட எமது மக்களின் பிரச்சனைகளை விரிவாக கூறியிருக்கின்றார். இந்திய நாடாளுமன்ற குழுவில் கிழக்கு மாகாணம் சார்பாக கதைக்க வேண்டிய விடயங்களை நாங்கள், சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவினருக்கு தெரிவித்துள்ளோம்.

இந்திய நாடாளுமன்ற குழுவில் தமிழ் நாட்டு பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் சார்பில் எவரும் இடம்பெறவில்லை. இக்குழுவினரின் இலங்கை விஜயம் தொடர்பாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகள் காரணமாக, அவர்கள் இவ்விஜயத்தில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்தனர்.

இந்நிலையில் எமது மாவட்ட மக்களும் இதனை எமது கவனத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே நாமும் இந்திய நாடாளுமன்ற குழுவுடன் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். அதுமட்டுமல்ல இந்திய நாடாளுமன்ற குழுவினால் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் சகிதம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளனர்.

ஆனால் இந்த சந்திப்புக்களில் மக்கள் தமது பிரச்சனைகளை சுதந்திரமாக எடுத்துக் கூறவில்லை.கிழக்கு மாகாணத்திற்கான இவர்களில் விஜயம் ஒரு கண்துடைப்பாகவே உள்ளது. ஒரு சில மணி நேரங்களை உள்ளடக்கியதாக இந்த விஜயம் அமைந்தது. அதுவும் இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலைய திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொள்வதாகவே அமைந்தது.

இம்மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறியவில்லை? அவர்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதை கண்டறியவில்லை. அதுமட்டுமின்றி சமூக சமய அமைப்பு பிரதி நிதிகளைக் கூட இவர்கள் சந்திக்கவில்லை.

ஏற்கனவே இந்திய அரசாங்கத்தினால் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த உதவிகள் கூட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை. ஆனால் தரப்பினர் அந்த உதவிகளை அரசியல் மயப்படுத்தி தங்களின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள். அது இன்னமும் தொடர்கின்றது. இதைப்பற்றி பலமுறை தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .