2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

இஸ்லாமிய கலாசார கண்காட்சி நாளை காத்தான்குடியில்ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 31 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


இஸ்லாமிய கலாசார கண்காட்சி காத்தான்குடியில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த கண்காட்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என காத்தன்குடி பிரதேச செயலாளரும் கண்காட்சி ஏற்பாட்டுக்குழு தலைவருமான எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றை பாதுகாத்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் அரும்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஓர் அங்கமாகவே பெப்ரவரி 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் காத்தான்குடியில் தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அனைவராலும் திரும்பி பார்க்கப்படுகின்ற காத்தான்குடியின் பிரதான வீதியில் பஸ்மலா சதுக்கத்தின் முன்பாக அமைந்துள்ள மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இந்த கலாசார கண்காட்சி நடைபெறவுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களில் பின்வரும் விடயங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
  • இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பகால தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், கல்வெட்டுக்கள், சிலாசனங்கள், புள்ளிவிபரங்கள், ஆவணச் சுவடிகள், வரலாற்றுக் குறிப்புக்கள், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் முஸ்லிம்கள் குறித்த புள்ளிவிபரங்கள், அறிக்கைகள், வரலாற்றுக் குறிப்பேடுகள், மலைகள், குன்றுகள், ஆவணப்படங்கள்
  • வெளிநாட்டு வர்த்தகம், பட்டுப்பாதை, நாணயங்கள்
  • உள்நாட்டு வர்த்தகம், கரவான்பாதை, விவசாயம், மீன்பிடி, பணிக்கர்(மரபு ரீதியான யானை பிடித்தல்)
  • யூணானி மருத்துவம், பண்டய கால அரசர்களுக்கு ஆற்றிய மருத்துவ சேவை
  • கட்டிடக்கலை, பள்ளிவாசல்கள் வீட்டமைப்பு
  • அரசியல், தேசிய ஒற்றுமைக்கான முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு
  • வாழ்வியல், மொழி, அரபுத் தமிழ், இலக்கியம் பற்றிய ஆய்வு, கல்வி, பாரமபரியம், அரபு மத்ரசாக்களின் வரலாறு, ஆடை அணிகலன்கள், மனைப் பொருட்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், திருமண சடங்குகள், பட்டய கல்யாணம், திருக் கலியாணம்
  • கலையும்இலக்கியமும்,பொல்லடி,சிலம்படி,நாடகம்,வில்லுபாட்டு, மெத்தை வீடு கட்டுதல்
  • இலக்கிய மரபுகள்,கதைகூறுதல்,பாபாடுதல்
  • முஸ்லிம்கள் உலக நாகரிகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அறிவியல், மருத்துவம், கணிதம், கண்டுபிடிப்புக்கள், நாடுகான் பயணங்கள்
உட்பட மேலும் பல விடயங்கள் கண்காட்சியில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு வருபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அழகிய புராதன இடங்களையும் பார்வையிட முடியும். கிழக்காசியாவிலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழுகின்ற காத்தான்குடியின் பல சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளமுடியும்.

இக்கண்காட்சி ஏற்பாட்டில் ஒன்பது குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன இந்த கலாசார கண்காட்சிக்கான அலுவலகமொன்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இக்கலாசார கண்காட்சியுடன் முஸ்லிம்களின் கலை, பாரம்பரியம், வரலாற்று அம்சங்களை அரங்கேற்றும் நிகழ்வுகளும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் பெப்ரவரி 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலாளருமான எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டாக்டர் ஜெகத்பாலசூரிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகான சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கணுகல உட்பட  பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கலாசார கண்காட்சியை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் உட்பட பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .