2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்: துரைரெட்ணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

இலங்கை அரசாங்கம் தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின்  பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வர வேண்டும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழ் மக்களின்  பிரச்சினைகளை, கருத்திற்கொள்ளாது தமிழர்களும்  இத்தீவின் மக்கள் என்பதை புரிந்துகொள்ளாது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் காலத்திற்கு காலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பெரும்பான்மை கட்சிகள் தங்கள் சுயநல அரசியலுக்காக இப்பிரச்சினையை  கையில்  எடுத்து தீர்வு காண்பதற்குப் பதிலாக இன்னும் இன்னும்  சிக்கலுக்குரிய ஒன்றாக மாற்றியே வந்துள்ளது.

இதன் காரணமாக  மூன்று  தசாப்தங்களுக்கு மேலான கொடிய யுத்தம், இத்தீவின் சகல  இன மக்களையும்  சொல்லொண்ணாத் துன்பத்தையும் இழப்புக்களையும் சந்திக்க வழிவகுத்து விட்டது. ஆயினும் தமிழர் அடைந்த துயரங்களும் இழப்புக்களும் வேதனைகளும் சொல்லில் அடங்காதவை. ஆனால் தமிழர்களுக்கான உரிமை தொடர்பான தீர்வானது  இனவாத அரசினால்  இன்னும் இன்னும் மறுக்கப்பட்டுக் கொண்டேவருகின்றது.

அரசின் இனவாத செயற்பாட்டின் காரணமாக காலத்துக்கு காலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், தீர்வு முயற்சிகள் அனைத்தும் காலத்தை இழுத்தடிப்பதாகவே உள்ளதுடன், தமிழர்களின் வாழ்வை இன்னும் இம்மண்ணில் சிக்கலுக்குரிய ஒன்றாகவே மாற்றிவிட்டது.
எமது உள்விவகாரமாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச மட்டத்திற்கு நியாயம் கேட்டுச்செல்ல வேண்டிய நிலைக்கு  மாற்றப்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இதற்கு காரணமானவர்கள் இலங்கைத்தீவின் மக்கள் அல்ல. இனவாத ஆட்சியாளர்களே காலத்திற்கு காலம் பதவியேற்ற இரு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் தமிழர் தீர்வு விடயத்தில் நடந்து கொண்ட முறை  காலத்தை  இழுத்தடித்து விடும் வரலாற்றைகொண்டுள்ளது.
ஆயினும் எமது ஆட்சியாளர்கள் இன்னும் கண் திறக்கவுமில்லை.   இலங்கை அரசு கடந்தகாலத்தில்  தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் காரணமாக இன்று  சர்வதேசத்தின் அணுங்குப் பிடிக்குள்  சிக்கியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா,  சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை சபையும்  இலங்கை அரசின்  கௌரவத்தை பாதுகாப்பதற்கு பதிலாக இலங்கை அரசின் பிழையான அணுகுமுறையால் சர்வதேசம்  இங்கு வாழும் பல்லின  சமூகத்தவர்களின் ஜனநாயக, மனித உரிமைகளை  மதித்து இடித்துரைக்க சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது

இம்மண்ணில் ஆட்சி நடத்தும் அதிகாரத்திலுள்ளவர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு இப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதையும் இலங்கை அரசு மறுக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் சர்வதேசத்தை முழுமையாக நம்புவதைவிட வேறு மார்க்கம் இல்லை என்பதை இலங்கை அரசுக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.

இதேவேளை தமிழர் தரப்பும் பிரச்சினையை தீர்ப்பதற்கு சரியான சந்தர்ப்பம் கைகூடிவரும் இந்நேரத்தை  உரியமுறையில் பயன்படுத்தி சகல வேறுபாடுகளையும் மறந்து தமிழர் நலன்சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க  முன்வர வேண்டும்.

தமிழ் தேசியத்தையும் அதன் சுயாதிபத்தியத்தையும்  தமிழர்களின் அபிலாஷைகளையும் ஒரே குரலில் அழுத்திச் சொல்ல கிடைத்ததொரு அரிய சந்தர்ப்பமென கருத்திற்கொண்டு துணிவுடன் கருமமாற்ற வேண்டிய காலமிது. எனவே  ஒருவரை ஒருவர்  குறைசொல்லி  அறிக்கை விட்டு  அரசியலை நடத்துவதைத் தவிர்த்து முறையான செயல்திட்டம் ஒன்றின் கீழ் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணமாகவும் இதைப் பயன்படுத்த வேண்டும். இவ்வேளையில் சர்வதேசம் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .