2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கடந்த கால கொடுமைகள் தெரியாதவர்களாக எதிர்கால சமூகம் வளர்க்கப்பட வேண்டும்: மீள்குடியேற்ற பிரதி அமைச்சர

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

கல்விச் சமூகங்களை உருவாக்குவதன் மூலம் நமது எதிர்கால சமூகங்களை பலம்உள்ளதாக ஆக்குவதுடன், எமது பிள்ளைகள் கடந்த கால கொடுமைகள் தெரியாதவர்களாகவும் வளர்த்தாக வேண்டும் என மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிரிக்கேட் கட்டளைத் தளபதி கேணல் திலக், மட்டக்களப்பு விமானப்படை விங் கொமாண்டர் எயார் மாசல் அஜித் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனால், தேசியக் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட மாவட்ட செயலகத்தில் இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, உதவி மாவட்டச் செயலாளர் வி.வாசுதேவன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்,

"நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பல துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். மட்டக்களப்பு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களும், சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரர்களாக இருந்து பலரை கழுமரத்திலும் ஏற்றியுள்ளனர்.

ஒரு குழந்தை சுதந்திரமாகப்பிறந்து சுதந்திரமாக வளர்ந்து சுதந்திரமாக இறக்க வேண்டும். இந்நிலைக்கு மாறாக பல உரிமை மீறல்களைச் செய்பவர்களாக மனித உரிமை மீறல்களில் ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறோம். வெளிச்சத்தில் நீங்கள் இருக்கும் போது தான் எல்லோரும் உங்களை பின் தொடர்வார்கள். ஆனால் இருட்டில் இருக்கும் போது உங்கள் நிழல் கூட உங்களைப் பின்தொடராது என்று ஒரு உதாரணம் இருக்கிறது. அந்த வகையில் எல்லோருக்கும் முன்மாதிரியானவர்களாக இருக்க வேண்டும்.

நமது மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிமதிக்கப்பட்டது முதல் மிகவும் திறமையாக உழைத்து வருபவர், மாவட்டத்தி;கு வரும் நிதிகளைத் திறமையான முறையில் ஒதுக்கி மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதில் முன்நின்று உழைத்து வருகிறார். அவருக்கு பல்வேறு வகைகளிலும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்க வேண்டும்.

அதே நேரம், மதகுரு சொன்னது போல ஒரு சமூகம் துன்பப்படும் போது மற்றைய சமூகம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. அதனை நேரடியாக கண்டு உணர்ந்தவன் என்ற வகையில், இதை அனைவரும் உணர்ந்தவகையில் செயற்படவேண்டும் என்பதுடன் ஒருங்கிணைந்து பங்காற்றவும் வேண்டும்.

ஜனாதிபதி பெருந்தொகைப் பணத்தினை நமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கியிருந்தார். எதிர்காலத்திலும் ஒதுக்கியிருக்கிறார். இன்னும் இன்னும் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கிவருகிறார். அதனைத் பயன்படுத்திக் கொள்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழ்கிறோம். அதேநேரம் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு நாகரீகமான அரசியலை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அரச அதிகாரிகள் அரசாங்கத்தை அனுசரித்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும்" என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .