2026 மே 06, புதன்கிழமை

மின்கட்டண அதிகரிப்பு; அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்: மார்கண்டு நடராசா

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'அண்மையில் அரசினால் கொண்டுவரப்பட்ட மின்சாரக்கட்டண அதிகரிப்பானது எமது மக்களின் மேல் சுமத்தப்பட்ட பாரிய சுமையாகும். இது எமது மக்களின் சகல தரத்தினரையும் பாரபட்சமின்றி பாதிப்புக்குள்ளாக்கியிருக்கின்றது. இருந்தும் கூடிய தாக்கத்தினை கீழ்மட்ட வருமானம் பெறும் ஏழை மக்களின் மீதும் மற்றும் எமது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மீதுமே ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அதனால், இந்த மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்' என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்த அரசானது கடந்த காலங்களில் படிப்படியாக பால்மா வகைகள் கோதுமைமா போன்ற நுகர்வுப்பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய், சகல எரிபொருட்கள் போன்ற மக்களின் அத்தியவசியப் பொருட்களின் மீது விலை அதிகரிப்பினை மலைபோல் உயர்த்தி மக்களின் மேல் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இம்மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மற்றுமொரு அணுகுண்டைப் போட்டுள்ளது.

இது சாதாரண அதிகரிப்பு அல்ல. இவ் உயரிய அதிகரிப்பினால் மக்களின் வாழ்வுச்சுமையானது அதிகரித்ததுடன் மக்கள் வாழ்வதா? அல்லது சாவதா? என்ற ஏக்கத்துடன் வாழவேண்டிய பாரதூரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே அரசு உடனடியாக இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பினை மீள்;பரிசீலனை செய்து மக்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள சுமையினை ஓரளவேனும் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையினை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் இன்று எமது நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து மற்றும் விபசாரம் என்பவைதான் மலிவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதனையும் குறிப்பிட்டுக்கூற விரும்புகின்றேன்' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .