2026 மே 06, புதன்கிழமை

காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளை தடுக்கவும்: செல்வராசா எம்.பி. கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்,-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலுள்ள காணிகளை வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.எஸ்.சாள்ஸிடமே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலுள்ள காணிகளை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேலும் தெரிவிக்கையில்,

'பட்டிருப்புத்தொகுதி வெல்லாவெளி பிரதேசத்தின் கண்ணபுரம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கண்ணியம்மை வயல் மற்றும் காடு சார்ந்த பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையாகும்.

இப்பகுதியில் 1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் கல்லாறு, துறைநீலாவணையை சேர்ந்த தமிழர்கள் விவசாயம் செய்து வந்தார்கள். இவர்களிடம் இக்காணிகளுக்கான உரிமைப்பத்திரங்களும்  உள்ளன.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அவர்கள் அங்கு விவசாயச் செய்கையில் ஈடுபட முடியாத நிலையேற்பட்டது.
தற்போது அமைதியான சூழ்நிலை நிலவினாலும் அவர்கள் அங்கு மீளத் திரும்ப முடியாத நிலையே உள்ளது. மேலும், அங்குள்ள வயல் நிலங்கள் தற்போது காட்டுப் பிரதேசமாக காட்சியளிக்கின்றது. இதனால் அங்கு யானைகள் போன்ற ஜீவராசிகள் நடமாடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
தங்களது காணிகளில் அத்துமீறிச் சென்று அம்பாறை மாவட்ட சிங்களவர்கள் துப்புரவு செய்வதாக மேற்படி காணி உரிமையாளர்கள்; எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.  இதையடுத்து நான் கடந்த செவ்வாய்க்கிழமை  நேரில் சென்று அக்காணிகளை பார்வையிட்டேன்.

கனரக இயந்திரங்கள் சகிதம் காடுகள் துப்புரவாக்கப்படுகின்றன. அங்கு இராணுவமும் சிவில் பாதுகாப்பு படையினரும் அரசாங்க அதிகாரிகளும் சில பொதுமக்களும் காணப்பட்டனர்.

இது சம்பந்தமாக எனக்கு கிடைத்த தகவலின்படி அந்தக் காட்டுப் பகுதியில் காணப்படும் யானைகளை விரட்டுவதற்காகவே காடுகள் அழிக்கப்படுவதாக ஒரு தகவல் கூறுகின்றது.  ஆனால் அப்படியல்ல என நான் நினைக்கின்றேன். காரணம் அந்தப் பிரதேச செயலாளருக்குத் தெரியாமலே இந்த வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

எம்மை பொறுத்தவரை இந்த நடவடிக்கையானது எமது மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.  அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளும் இதன் பின்னணியில் இருப்பதாக அறிய முடிகின்றது.

காடுகளிலிருந்து யானைகளை விரட்டுவதென்றால் அது வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புடைய விடயம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.   இது தொடர்பாக வெல்லாவெளி பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். இதை தடுத்து நிறுத்துமாறும் கேட்டுள்ளேன். எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இப்பிரச்சினையை முன்வைக்க இருக்கின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .