2026 மே 06, புதன்கிழமை

கிரானில் இந்திய வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை: யோகேஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்,-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ், கிரான் பிரதேசத்தில் 100 வீடுகள் அமைப்பது தொடர்பில் எந்தவித கூட்டத்தையும் கிரான் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரான மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நடத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் இந்திய தூதுவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்திய அரசாங்கம் 2,000 வீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கியுள்ளது. இந்த வீடுகள் தொடர்பில்  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தூதரகத்திற்கு அழைத்து விளக்கமளித்துள்ளீர்கள். அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக   300 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் 100 வீடுகள் வெல்லாவெளி பிரதேசத்திலும் 100 வீடுகள் வவுணதீவு பிரதேசத்திலும் 100 வீடுகள் கிரான் பிரதேசத்திலும் கட்டப்படவுள்ளன.

இந்த வீடுகளை அமைப்பது தொடர்பில் வெல்லாவெளி பிரதேசத்திலும் வவுணதீவு பிரதேசத்திலும் அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அந்தப் பிரதேச அமைப்புகளும் அழைக்கப்பட்டு அரசியல் வேறுபாடுகள் அற்ற நிலையில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கிரான் பிரதேசம் கல்குடா தொகுதியில் உள்ளது. இந்தப் பிரதேசத்திற்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளார். ஆனால் இந்தப் பிரதேச வீடுகளை வழங்கல் தொடர்பில் இதுவரை எந்தக் கூட்டமும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை பெறும் நோக்குடன் வீடுகள் வழங்குவதாக தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து வீடு வழங்கும் விண்ணப்பம் என தமது ஆதரவாளர்களுக்கு வழங்கியது. ஆனால், இந்திய அரசாங்கம் வழங்கும் வீடுகளை தமது கட்சி ஆதரவாளர்களுக்கு தான் வழங்கிய விண்ணப்பத்திற்கு அமைய வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உண்மையிலேயே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச மக்களுக்கு அரசியல் பேதமற்ற முறையில் இந்திய அரசாங்கத்தின் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம். அதுவும், இந்த உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால், கிரான் பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது அரசியல் ரீதியாக இந்திய அரசாங்க வீட்டை வழங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே விரைவாக இந்திய தூதரகம் இந்த விடயம் தொடர்பில்  தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பேதமற்ற முறையில் வீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு அறிவித்தல்களை வழங்கி அவர் ஊடாக பிரதேச செயலாளர்களின் கீழ் எதுவித அரசியல் பேதமற்ற முறையில் வீடுகளை வழங்குவது தொடர்பில்  ஒன்றுகூடலை நடத்தி தெரிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .