2026 மே 06, புதன்கிழமை

முஸ்லிம்கள் அரசில் இருப்பதில் அர்த்தமில்லை: ஏ.சீ.எம்.கியாஸ்

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், -எஸ்.எம்.எம்.முர்ஷித்

முஸ்லிம்கள் அரசாங்கத்தோடு இருப்பதில் எந்தவித பயனுமில்லை என்பதுடன் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு வெட்கித் தலை குனியும் தலைமைகள் இந்த சமூகத்திற்கு தேவையில்லை என  ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சீ.எம்.கியாஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும்போது வெட்கத்தில் தலை குனிந்து இருக்காமல் முஸ்லிம் சமூகத்தை தாங்கி இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அரசின் பின்னால் இருந்து செயற்படுகின்ற பேரினவாதிகள் தமிழர்களை நசுக்குவது போன்று முஸ்லிம்களையும் நசுக்கி கேவலப்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

எதிரான பேரினவாதிகளின செயற்பாடுகளை தட்டிக் கேட்ட அஸாத் சாலியை கைதுசெய்து முஸ்லிம்களின் குரல்களையும் அடக்கியாள இந்த அரசாங்கம் விரும்புகின்றது. ஆதலால் இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் இருப்பதில் எந்தவித பயனுமில்லை. முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு வெட்கித் தலை குனியும் தலைமைகள் இந்த சமூகத்திற்கு தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறும் இவ்வேளையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினை புகட்டி முஸ்லிம் சமூகத்தின் பலத்தினையும் காட்டியிருப்பார்.

இந்த அரசாங்கமும் இருந்திருக்காது. அராஜக வெறி கொண்ட பேரினவாதிகளின் குரலும் மேலோங்கி இருக்காது என்பதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் புரிந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயற்பட வேண்டும்.

முஸ்லிம்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தி போராடவுமில்லை. தனி நாடு கேட்கவுமில்லை. மற்றவர்களின் மதத்தில் கை வைத்து அம்மதத்தினை பின்பற்றும் மக்களையும் கேவலப்படுத்தவுமில்லை.

முஸ்லிம்கள் கலாசார உடைகளை அணிந்து கொண்டு வைத்தியசாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் செல்கின்றார்கள் என்று  ஹெல உறுமய கூறுகின்றது.

ஒவ்வொரு இனமும் தங்களது கலாசார உடைகளை அணிவதற்கு உரிமை உண்டு. இதை பயங்கரவாத செயல் என்றோ அல்லது கலாசார சீரழிவென்றோ கூறமுடியாது. இதை நினைத்து முஸ்லிம் சமூகம் வேதனையடைகிறது' என்றார்.


  Comments - 0

  • vallarasu Thursday, 09 May 2013 04:31 PM

    எப்போது இலங்கை முஸ்லிம் பிரச்சினை முடியும் தெரியுமா? சில முஸ்லிம் அரசியல்வாதிகள் உண்மையான முஸ்லிமாக நடந்துகொண்டால் மட்டுமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .