2026 மே 06, புதன்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி

A.P.Mathan   / 2013 மே 11 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரி பயிலுனர் பயிற்சி 2013ஆம் இலக்க கடிதத்தின் அறிவுத்தல்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட 457 பட்டதாரி பயிலுனர்களிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் 370 பேர் திறன் அபிவிருத்தி பயிற்சி திட்டத்திற்காக எம்பிலிபிட்டிய, மாதுறு ஓயா, மின்னேரியா, சீனன்குடா ஆகிய நான்கு பயிற்சி நிலையங்களில் 02 வாரகால பயிற்சிக்காக கடந்த 8ஆம் திகதி முதல் இணைக்கப்பட்டுள்ளனர்.
 
இப்பயிற்சியினை பட்டதாரி பயிலுனர்கள் பெறுவதன் மூலம் கிடைக்கும் அறிவு, திறன் ஆகியன இலங்கையினை வறுமையிலிருந்து விடுவித்து நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்றும் தூரநோக்கை வெற்றிகரமாக்கி கொள்ள பெரிதும் உதவுவதோடு, சம்பிரதாயபூர்வ அரச சேவையிலிருந்து விடுபட்டு அபிவிருத்தி அலுவலராக கிராமிய மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், வறுமையை ஒழிக்கின்றதுமான தேசிய செயன்முறையை நடைமுறைப்படுத்தும் சவாலான பணியை ஏற்கக்கூடிய சுயமான ஊக்கம் பெற்ற முன்மாதிரியான தலைமைத்துவத்துடனான புதிய அபிவிருத்தி அலுவலராவதற்கு இப்பயிற்சி ஆரம்பமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இப் பயிற்சி நெறியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கடமைகள், பொறுப்புக்கள் திவிநெகும செயற்றிட்டம், மற்றும் ஏனைய நிதி திட்டங்கள், திவிநெகும தொடர்பாக ஏனைய அமைச்சுக்களின் பங்கு, அலுவலக நடைமுறைகள், நிதி பிரமாணங்கள், வங்கிகளின் கடமைகளும் பொறுப்புகளும், தலைமைத்துவம், மனைப் பொருளாதார அபிவிருத்தி சட்டமும் அபிவிருத்தியும் ஒருமைப்பாடும் சமூக அபிவிருத்தியும் போன்ற பாடநெறிகளும் மற்றும் தேக அப்பியாசம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
 
இப்பயிற்சி நெறியிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடைய தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகிய காரணங்களுக்காக 87 பட்டதாரி பயிலுனர்களுக்கு இப்பயிற்சி நெறிக்கு கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .