2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் வறுமையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 12 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்டுவதற்காக அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உரிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என  மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலாசார விளையாட்டு விழாவிலும் சாதனையாளர் பாராட்டு விழாவிலும் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளையும் இன்னல்களையும் சந்தித்திருந்தனர். 

இந்த மாவட்டத்தில்  தற்போது அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வருடங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இணங்க ஐந்தாண்டுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 40 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குரிய வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்குரிய நிதித் தேவைகள் குறித்து ஐரோப்பியம் ஒன்றியம், மற்றும் ஏனைய அமைப்புக்களிடம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5 வருட நிறைவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்தின் நோக்கம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்டுவதற்காக அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உரிய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதுபோல் வீடு அற்றோருக்கான வீடுகளை வழங்கும் திட்டம் மிக விரைவில் இந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தெயட்ட கிருள  திட்டத்தில்; வீதி அபிவிருத்திக்காக 1,200 மில்லியன் ரூபாவும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் பாலங்களை நிர்மாணிப்பதற்காக 626 மில்லியன் ரூபாவும்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனைவிட மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் மலசலகூடங்களையும்  கணினி வலயமைப்புகளையும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் பொதுமக்களாகிய நீங்கள் உங்களது சமூக ஒழுக்கத்தினைப் பேணுவதோடு மதுபாவனையிலிருந்தும் விடுபட வேண்டும் அப்போதுதான் இம்மாவட்டம் மேலும் வளர்ச்சிபெறும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .